திருப்புல்வயல்
புதுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த ஓரூர். அங்கே
ஒரு மலையின்மீது குமரக்கடவுள் திருக்கோயிலுள்ளது. அதற்கு
அருணகிரிநாதர் திருப்புகழும் உளது - என்பர்.
இச் சதகத்தின்
இறுதியிலே, ‘பன்னிய புல்வயலில் வாலகும ரேசர்மேற்
பரிந்து ‘குருபாத தாசன்' என வருவதாலே இந்
நூலாசிரியர் பெயர்
குருபாததாசர் என அறியலாம். இவரது இயற் பெயர் முத்துமீனாட்சிக்
கவிராயரென்று கூறுகிறார்கள். வேளாளர் குலம் என்பர்.
பூமேவு
புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.
|
(இதன்பொருள்.)
பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் மேல் -
புவியிலே சிறப்புற்ற திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுள்பால்,
தேமேவிய சதகம் செப்ப - இனிமை பொருந்திய சதகத்தைக் கூற,
கோமேவிக் காக்கும் சரவணத்தான் - தலைமையாக இருந்து காப்பாற்றும்
சரவணத்திலே தோன்றிய முருகனும், கம்பம் - (அடியவருடைய அன்பாகிய)
கட்டுத்தறியிலே பிணிப்புண்ட, கும்பத்து ஐந்துகரம் கா குஞ்சரவணத்தான் -
குடம் போன்ற மத்தகத்தினையும் ஐந்து திருக்கைகளையும் உடைய, காட்டில்
உறையும் யானையின் வடிவத்தையுடைய மூத்த பிள்ளையாரும், காப்பு -
காவலாகும்.
(விளக்கவுரை.)
புல்லை - திருப்புல் வயல் (மரூஉ). ஒரு சொல் தன்
வடிவம் திரிந்து மருவி வருவது மரூஉ. மருவுதல்- பல நாள் பழகி வருதல்.
சென்னைப்பட்டினம் என்பது சென்னை எனவும், கோயம்புத்தூர்
கோவையெனவும், பூவிருந்தவல்லி பூவையெனவும் வருவனவும் மரூஉ ஆகும்.
|