பதிப்புரை | நிலையில், விருத்தியுரைக்கு முன்பாக எளிய பதவுரையைக் கற்பதே நலம் பயக்கும் என்று மாணவர் மனப்பாங்கையும் கற்பித்தல் முறையையும் கருத்தில் கொண்டு கூழங்கைத் தம்பிரான் இந்தக் காண்டிகையுரையை வடிவமைத்திருக்க வேண்டும். மறைந்துபோனதாகக் கருதப்பட்ட இந்த உரையின் கடிதப்பிரதி ஒன்று லண்டன் அருங்காட்சியக நூலகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. அந்தச் சுவடியை ஆதாரமாகக் கொண்டு ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனம் ஒரு துவக்க நிலைப் பதிப்பை (அ. தாமோதரன், 1980) வெளியிட்டுள்ளது. | சிவஞான முனிவர் | சிவஞான முனிவர் திருத்திய புத்தம் புத்துரை தனித்த உரை அல்ல; இந்த உரை முழுமைக்கும் சிவஞான முனிவரே ஆசிரியரும் அல்லர். என்றாலும் தமிழ் கூறும் நல்லுலகம் இந்த உரையை அவர் பெயரால் அழைத்து மகிழ்கிறது. இவ்வுரையைப் பற்றி, “இது சங்கர நமச்சிவாயர் உரையைப் பெரும்பாலும் தழுவிச் சில சில பகுதிகளை மாற்றி, அரிய வடமொழி தென்மொழி விதிகளை உரிய இடங்களிற் சேர்த்து, திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ சிவஞான யோகிகளால் விரிவாக இயற்றப் பெற்றது.” என்றும் (சாமிநாதையர், 1925. முகவுரை பக். 2), “இவ்வுரையே புலமைக்குப் பெருந்துணையாய், புலவர் புலத்தை அளக்கும் அளவுகோலாய், திருக்குறள், திருக்கோவையார், சங்க இலக்கியங்கள், மெய்கண்ட நூலுரைகள் (ஆகிய) இவற்றைப் படித்துய்ய உதவும் உறுதுணையாய் அமைந்தது.” என்றும் (தண்டபாணி தேசிகர், 1957. முகவுரை. பக். 8), “சிவஞான முனிவர் தமிழ் இலக்கண உலகிற்குச் செய்த பெருந் தொண்டுகளில் ஒன்று நன்னூலுக்கு விருத்தியுரை இயற்றியதேயாம்.” என்றும் (மு. வை. அரவிந்தன், 1968. பக். 423; 1995. பக். 538) புகழ்ந்து கூறுவார்கள். விருத்தியுரையில் அவர் செய்த திருத்தங்களுக்கு இந்தப் புகழ் மொழிகள் பொருந்துமா? மாதவச் சிவஞான முனிவரின் பெரும்புலமைக்குப் புத்தம் புத்துரை49 உண்மையில் பெருமை தரக் கூடியதா என்று யாரும் ஆராயவில்லை. ------------------------------ 49ஒரு உரையாசிரியர் இயற்றிய உரையில் சில விளக்கக் குறிப்புகளைச் சேர்த்துவிட்டு அதைத் தனித்ததோர் உரையாகத் தமது பெயரால் வழங்கச் செய்யும் நோக்கம் இலக்கண விளக்கச் சூறாவளி எழுதிய சிவஞான முனிவருக்கு இருந்திருக்குமா என்பது மேலும் ஆராயப்பட வேண்டும். சங்கர நமச்சிவாயர் உரையோடு நன்னூலைப் பாடம் சொல்லிய காலத்தில் தமது கையேட்டில் சிவஞான முனிவர் ஒப்பியல் நோக்கில் சில கருத்துகளைக் குறித்து வைத்திருக்கக் கூடும். இது பயிற்றாசிரியர்களின் பழக்கம். முனிவரின் இந்தக் கையேடு ஆதீன வட்டத்தில் புத்தம் புத்துரை என்று வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. | |
|
|