பதிப்புரை | புகழ்வது54 முற்றிலும் பொருந்தும். தமிழ் உரை வரலாற்றில் கண்டன உரை என்னும் புதுவகையைத் தோற்றுவித்த பெருமையும் முனிவரையே சாரும். சுடுமொழி நிறைந்த கடுநடையைத் தவிர்த்து, நடுநிலையோடு முனிவர் இந்த மறுப்புரைகளை எழுதியிருந்தால் தமிழ் விமர்சனக் கலைக்கு வித்திட்டவராக அவர் விளங்கியிருப்பார். ஆதீனங்களுக்குள்நிலவிய பகையுணர்வால் தூண்டப்பட்டு, இக்கண்டன நூல்களை முனிவர் எழுதியதால் புலமையை விடச் சீற்றமும் செருக்கும் அவற்றில் தலைதூக்கிவிட்டன. இந்தக் குறைபாடு முனிவரின் உரைநெறியில் மதிக்கண் மறுப்போல நிலைத்துவிட்டது. மறுப்புரையும் கண்டனமும் எழுதுவதில் முனிவரின் முனைப்பு பெயர் பெற்றது என்றாலும் விருத்தியுரையின் திருத்தப் பகுதிகளில் அவை மிகுதியாக இடம் பெறவில்லை. தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் இலக்கண விளக்கச் சூறாவளியிலும் உள்ளவையே புத்தம் புத்துரையின் திருத்தப் பகுதிகளில் (நன். சிற. பாயி., 91, 94, 284, 290, 293) மீண்டும் தலைகாட்டுகின்றன. அவற்றைத் தவிர மயிலைநாதரையும் (நன். 137) சங்கர நமச்சிவாயரையும் (நன். 125. 295) மறுத்துள்ள பகுதிகளில் அவர் காட்டும் காரணங்களில் வலிவும் இல்லை; கையாண்ட நடையில் கடுமையும் இல்லை. இதோடு தொடர்புள்ள இன்னொரு கருத்தும் நினைவுக்கு வருகிறது. பிற உரைகளிலிருந்து சிவஞான முனிவர் எடுத்து எழுதிய உரைப் பகுதிகள் புத்தம் புத்துரையில் கலந்திருப்பதால் அவருடைய மறுப்புரைகளை ஆராயும் போது பலர் தடுமாறுகின்றனர். குறிப்பு வினைமுற்றுகளைப் பற்றிய நூற்பாவுக்கு முனிவர் வழங்கியுள்ள திருத்தம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அப்பகுதியில், “இங்ஙனம் வரும் செய்யுட்கு எல்லாம் நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர், உரையாசிரியர் முதலாயினார் முற்றாயும் எச்சமாயும் பொருள் உரைக்கின் வழுவாம் என்று கருதி வியங்கோட்பொருட்டு என்றும் விதிப்பொருட்டு என்றும் தகுதிப்பொருட்டு என்றும் வேண்டுவ என்றும் தமக்கு வேண்டியவாறே பொருள் எழுதிச் சொற்குணம் வாளா போயினர்.” (நன். 339) என்று ஒரு நீண்ட தொடர் காணப்படுகிறது. இந்தத் தொடரை ஆதாரமாகக் கொண்டு சிவஞான முனிவரின் உரைநெறியைச் சிலர்55 வரையறுப்பார்கள். ஆனால் இத்தொடர் எழுத்து மாறாமல் இலக்கணக் கொத்திலிருந்து (இல. கொ. 85 உரை) எடுக்கப்பட்டது. அதனால் இது சாமிநாத தேசிகரின் உரைநெறி ஆகுமே தவிரச் சிவஞான முனிவரின் நெறி ஆகாது. --------------------------- 54கா. சுப்பிரமணிய பிள்ளை, 1955. பக். 3. 55க. ப. அறவாணன், 1977. பக். 165; இரா. இளங்குமரன், 1988. பக். 300; க. விநாயகம், 1991. பக். 44. | |
|
|