பதிப்புரை | குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. மேலும் சூத்திர விருத்தியில் காணப்படும் இலக்கணக் கருத்துகளில் பல புத்தம் புத்துரையிலும் காணப்படுகின்றன. சார்பெழுத்துகள், எழுத்துகளின் கிடக்கைமுறை, போலி எழுத்துகள், ஆகுபெயர், ஆறன் உருபு முதலிய இலக்கணச் செய்திகள் தொல்காப்பியச் சூத்திர விருத்தியை நோக்கப் புத்தம் புத்துரையில் திருத்தமும் தெளிவும் பெற்றுள்ளன. அதனால் அவற்றை முனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலிருந்து எடுத்துச் செம்மைப்படுத்திப் புத்தம் புத்துரையில் அமைத்ததாகக் கொள்வதே சிறப்பு. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து எண்ணும் போது முனிவர் எழுதிய இலக்கண உரைகளுள் இறுதியானது புத்தம் புத்துரை என்றே தோன்றுகிறது. இனி அதன் உள்ளடக்கத்தை நோக்குவோம். சிவஞான முனிவர் நன்னூல் முழுமைக்கும் உரை61 எழுதவில்லை என்பது முன்பே சொல்லப்பட்டது. சங்கர நமச்சிவாயர் இயற்றிய விருத்தியுரையில் முனிவர் பல பகுதிகளைக் கூட்டினார்; சில பகுதிகளைக் குறைத்தார்; சிற்சில பகுதிகளைக் குறைத்தும் கூட்டியும் மாற்றினார்; மூன்று62 நூற்பாக்களுக்கு (நன். 50, 125, 293) மட்டுமே புத்துரை எழுதினார். முனிவர் கூட்டி எழுதிய விளக்கங்கள் எல்லாம் அவரே சொந்தமாக எழுதியவை என்றும் சொல்ல முடியவில்லை. காட்டாக உயிர்மெய் உருவு திரிதலுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கம் (நன். 89) தொல்காப்பிய உரைகளிலிருந்து (தொல். நூன். 17 உரை) கொண்டது. சங்கர நமச்சிவாயர் உரையைக் குறைத்துள்ளமைக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு தத்தம் பகாப்பதங்கள் (நன். 134) என்ற சூத்திரத் தொடரின் நயவுரை. சங்கர நமச்சிவாயர் உரையைக் குறைத்ததே இந்நூற்பாவின் உரையில் சிவஞான முனிவர் செய்த திருத்தம். வேறு பல பகுதிகளில் (நன். 320, 326, 342) இந்த உரைநீக்கம் சொல்லளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. முனிவர் குறைத்துக் கூட்டிய சில இடங்களில் கூட்டிய பகுதியை விடக் குறைத்த உரைப் பகுதியே மிகுதி. இதற்குத் தக்கதோர் உதாரணம், “செய்யென் வினைவழி” (நன். 138) என்னும் நூற்பாவின் உரை. இவ்விடுபாடுகள் எல்லாம் உண்மையிலேயே --------------------------- 60இலக்கண விளக்கச் சூறாவளியில், “சில இடங்களில் நன்னூல் விருத்தியுட் காண்க” என்று சிவஞான முனிவர் குறிப்பிட்டுள்ளதாக இலக்கண வரலாற்றில் (சோம. இளவரசு, 1963. பக். 199) கூறப்படுவதற்குச் சான்று இல்லை. 61பவானந்தம் பிள்ளை சிவஞான முனிவரை நன்னூல் உரையாசிரியர்களுள் ஒருவராகக் குறிக்காததோடு, “இவர் சங்கர நமச்சிவாயர் உரையைத் திருத்தியதாகக் கூறும் கூற்றும் ஆராயத் தக்கது.” (நன்னூல், சென்னை, 1922. பக். xv; vxii) என்று கூறும் கருத்துரையை ஈண்டு ஒப்பிடுக. 62இவற்றுள் ஒரு நூற்பாவுக்கு (நூ. 50) முனிவர் எழுதிய புத்துரை ஆறுமுக நாவலர் (1851; 1933.), சந்திரசேகர கவிராஜ பண்டிதர் (1855), தெய்வசிகாமணி முதலியார்-சண்முகம் பிள்ளை (1889) முதலியோரின் பதிப்புகளில் இடம் பெறவில்லை. | |
|
|