பதிப்புரை | எனவே இத்தகைய திருத்தங்கள் எல்லாம் எளிய அடிக்குறிப்புகளே தவிர அரிய விளக்கங்கள் ஆகா. அதோடு அல்லாமல் முனிவர் செய்துள்ள சில திருத்தங்களின் தேவை குறித்தும் ஐயம் உண்டாகிறது. காட்டாகப், “பலசில வெனுமிவை” (நன். 170) என்னும் சூத்திரத்தின் உரையில், “செய்யிய வென்னும் என்ற சூத்திரத்தான்” (நன். 167) என்ற தொடர் முனிவரால் கூட்டப்பட்டுள்ளது. இந்த விளக்கக் குறிப்பைச் சங்கர நமச்சிவாயரே, “இதனுள் மிகுதல், “செய்யிய” என்னும் சூத்திரத்தான் விலக்கி, ஈண்டு விதித்தமையின் சிறப்புவிதி ஆயிற்று.” (நன். 170) என்று எழுதியுள்ளார். அதனால் சிவஞான முனிவர் இப்பகுதியில் செய்த மேனிலைத் திருத்தம் தேவைதானா என்று எண்ணத் தோன்றுகிறது.65 இதுபோலவே இடைச்சொல்லின் பெயர்விளக்கம் கூறும் பகுதியில் பாலைத்திணை நடுவுநிலைத்திணை ஆயது எங்ஙனம் என்று முனிவர் விளக்குவது (நன். 420) மற்றொன்று விரித்தல் என்றே சொல்லத் தோன்றுகிறது. அன்றியும் இந்த விளக்கம் தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் (பக். 65-68) முன்பே ஒரு முறை அவரால் கூறப்பட்டுள்ளது. கூறியதையே மீண்டும் இந்த நூற்பாவின் உரையில் கூறுவதற்குத் தக்க காரணமும் இல்லை; அது உரைமரபும் ஆகாது. சிவஞான முனிவரின் திருத்தம் வேறு சில இடங்களில், “அடக்கிப்” (நன். 262), “இவன், உவன்” (நன். 276) “முதலிய” (நன். 393), “அவற்றை” (நன். 399) என்பதுபோலச் சொல்லளவில் நின்றுவிட்டது. எனவே மேலே எடுத்துக்காட்டிய சிறு திருத்தங்கள், எல்லாம் சிவஞான முனிவருக்கோ அல்லது சங்கர நமச்சிவாயர் உரைக்கோ பெருமை அளிப்பனவாக அமையவில்லை. சிவஞான முனிவர் செய்த விளக்கமான திருத்தங்களில் பல (நன். சிற. பாயி., எழுத்ததிகாரத் தோற்றுவாய், 73, 91, 94, 145, 267, 290, 296, 300, 420) தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பிய உரைகள், இலக்கணக் கொத்து போன்ற நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டவை. வினையியலில் முனிவர் விரிவாகத் திருத்தி எழுதிய பகுதிகள் பலவும் பிற உரைகளிலிருந்து எடுத்துக்கொண்டவை. முன்னைய இரண்டும் முனிவருடைய நூல்கள். அவற்றிலிருந்து அவர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இலக்கணக் கொத்திலிருந்து பல பகுதிகளை எழுத்து மாறாமல் எடுத்து நன்னூல் பெயரியலில் முனிவர் சேர்த்துக்கொண்டதைப் புத்துரைத் திருத்தம் என்று ஏற்றுக்கொள்ள இயலவில்லை. “ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறே அவ்வுரை வாசகத்தை எடுத்து எழுதினார்.” -------------------------- 65இத்திருத்தம் ஆறுமுக நாவலர் பதிப்புகளில் இடம் பெறவில்லை. | |
|
|