பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்141முத்துவீரியம்

(வ-று.) ஆ வாழ்க, ஆ வந்தது, ஆ யாது, ஆ கன்று, ஆ கரிது. (55)

இரண்டாம் வேற்றுமை

513. ஐயே யிரண்டா வதனுரு பாகும்.

(இ-ள்.) இரண்டாம் வேற்றுமை யுருபு ஐயொன்றேயாம். (56)

அதன் பொருள் நிலை

514. காப்பி னொப்பி னாக்கலி னழித்தலின்
     அடைதலி னீத்தலி னஞ்சலி னுடைமையின்
     அன்ன பிறவு மதன்பய னிலையே.

(இ-ள்.) காப்பும், ஒப்பும், ஆக்கலும், அழித்தலும், அடைதலும், நீத்தலும், அஞ்சலும்,
உடைமையும் இவைபோல்வன பிறவும் இரண்டாம் வேற்றுமைப் பொருணிலையா மென்க.

(வ-று.) ஊரைப்புரக்கும், வேளையொக்கும், மரத்தை வளர்க்கும், வேலியைப்
பிரிக்கும், பதியையடையும். மாயையை நீக்கும், பேயை யஞ்சும், பொருளையுடையன்
பிறவுமன்ன. (57)

மூன்றாம் வேற்றுமை

515. ஆலா னோடொடு மூன்றன துருபே.

(இ-ள்.) மூன்றாம் வேற்றுமை யுருபாவது ஆல், ஆன், ஓடு, ஒடு ஆம். (58)

அதன் பொருள் நிலை

516. கருவி யுடனிகழ்வு கருத்தா வதன்பொருள்.

(இ-ள்.) கருவியும், உடனிகழ்ச்சியும், கருத்தாவும் மூன்றாம் வேற்றுமைப்
பொருணிலையா மென்க.

(வ-று.) வாளால் வெட்டினான், மகனொடு தந்தை வந்தான், அகத்தியனாற்
றமிழுரைக்கப்பட்டது எனவரும்.

(வி-ரை.) மேலைய நூற்பாவும், இந்நூற்பாவும்,

‘மூன்றா வதனுரு பாலா னோடொடு
கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள்’ (பெயரியல் - 40)

என்னும் நன்னூற் கருத்தைத் தழுவியனவாகும். (59)