பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1191

 

     3. செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் இறைவனுக்கு அமுது
செய்வித்தல் சிறந்த சிவபுண்ணியம்.

     4. வறுமையும் துன்பமும் வந்தகாலத்திலும் திருத்தொண்டின்
செயலைவிடாது செய்வர் பெரியோர்.

     5. செல்வமிக்க நிலையில் இருந்த தாயனார் அந்நிலை மாறித் தாம்
கூலிக்கு நெல்லரிந்து பிழைக்கநேர்ந்த காலத்தில் அக்கூலிநெற் கொண்டு
திருத்தொண்டினை விடாது செய்த செய்கை உய்திபெறும் உள்ளமுடைய
உலகம் பின்பற்றத்தக்கது.

     6. கூலி நெல்லினுள்ளும் தாம்பெற்ற சிறந்த செந்நெல்லை இறைவரது
திருவமுதுக்கு ஆக்கித், தாழ்ந்த கார்நெற்கூலி கொண்டு தாம் உண்டு
வாழ்ந்த தாயனாரது அருஞ்செயல் உலகை உய்விக்கவல்ல சிறந்த
உதாரணமாம். சிறந்தனவாகத் தாந்தாம் கொள்வனவற்றையே இறைவனுக்கு
ஆக்குதல் வேண்டும். "விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று, புரிகுழற்
றேவியைப் பரிவுடன் கொடுத்த, பெரிய அன்பின் வரகுண தேவர்" வரலாறு
சிந்திக்கத்தக்கது.

     7. உணவுக்கெனக் கொண்ட கார்நெல் மாறி, எல்லாம்
செந்நெல்லேயாகிய விளைந்தது கண்ட தாயனார் தமக்கு உணவுக்கு நெல்
இல்லாமையை மறந்து, அவ்வாறு தாம் பெறும் செந்நெற் கூலி முழுதும்
இறைவனுக்கே திருவமுதாக்கியதுமன்றி, அவ்வாறு ஆக்கப்பெற்ற இது, தமது
பெரும் புண்ணியம் என்று மகிழ்ந்ததும், தாம் கீரையும் தண்ணீரும் உண்டு
சீவித்ததும் மிக அரிய பெரிய செயல்கள். இந்நிலைமை கைவரப் பெற்றார்
பெரியார்; அவர்களே இறைவனருள் பெற உரியார்.

     8. கணவனாரோடு ஒருமித்த கருத்துடன் அமைந்து அதற்கு ஏற்றவாறு
மனைவாழ்க்கை நடத்திய தாயனாரது மனைவியாரின் உதாரணம்
பெண்ணுலகம் கண்டு போற்றிப் பின்பற்றத் தகுந்தது.

     9. கணவனார் கருத்தமைந்து அவரது திருப்பணியில் ஒன்றுகூடி
ஒழுகிய ஒழுக்கமே தாயனாரது மனைவியார்க்கு அவரைப் பிரியாதநிலையிற்
சிவலோகப் பெருவாழ்வும் தேடித் தந்தமை உலகம் கண்டு போற்றத்தக்கது.
"மாதரொடு மடவார்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கள் தூஉய்க்,
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே" - (சாதாரி
- 2) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் சிந்திக்கத்தக்கது.

     10. இறைவர் எங்குமுள்ளார் என்றறிந்த ஞானிகள் அவரை
எவ்விடத்தும் முன்னிலையாக்கிக்கொண்டு வழிபடுவர். இறைவர் தம்மை
வழிபடுவோரின் பக்குவத்துக் கேற்றவாறு அங்கங்கும் வெளிப்பட்டு
அருள்புரிவர்.

     11. தாம் நியதியாகச் செய்துவந்த திருத்தொண்டுக்கு முட்டுப்பாடு
நேர்ந்தபோது பெரியோர் உயிர்வாழத் தரியார்.

     12. அன்பு காட்டிய நெறியிற் செய்யப்பட்டபோது, தற்கொலையும்,
அறநூலால் விலக்கப்பட்ட பாவமாகாமற், பெரியோர்களாலும் போற்றப்பட்ட
புண்ணியமேயாம். இந்த அன்புச்செயல் சிவனிடமாகச் செய்யப்பட்டபோது
வீட்டுக்கு வாயிலாகும்.

            13. அரிவாட்டாய நாயனார் புராணம் முற்றும்