பக்கம் எண் :


1194 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

சூட்டி னடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்......விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி
வெற்பு வைப்பார்" (73) என்றது காண்க.

     ஈடு பெருக்கிய போர் - சூடு அடித்தபின் வைக்கோல்களைப் பெரும்
குவியல்களாக அடுக்கிக் குவித்த போர்கள். ஈடு - ஆதி நீண்டுவந்த
முதனிலைத் தொழிற்பெயர். ஈடு - இடுதலினாலே - ஒன்றன்மேல் ஒன்று
குவியலாக இடப்படுதலினாலே. போர் - வைக்கோற்போர். ஈடு -
ஒன்றுக்கொன்று சமமாகச்செய்த என்றும், பெருமைமிகச் செய்த என்றும் உரை
கூறுவாரும், போர் - நெற்போர் என்பாரும் உண்டு. இவை
பொருந்தாமையறிக.

     போர்களின் மேகம் இளைத்து ஏற என்றது தாழவரும் மேகங்கள்
தங்கக்கூடிய வளவிலே மிக உயர்ந்தனவாக வைக்கோற் போர்கள்
இடப்பட்டன என்க. இன்றைக்கும் மலைபோல நிமிர்ந்து காணக்கூடியபடி
மிகஉயரமாகிய வைக்கோற் போர்கள் இந்நாட்டின் புறங்களிலும்
(இத்திருமங்கல) நகரிலும் காணலாம். இளைத்து ஏறுதல் - மெல்லத் தவழ்தல்.
இலக்கணை. "சோலைகள் மேலோடும், வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ
நன்னாடு" (932) என்றதும் அங்கு உரைப்பவையும் இங்கு வைத்துச் சிந்திக்க.

     மேன்மழநாடு - இது நாட்டின் பெயர். மழநாடு - மழவர் என்ற
மரபினர் வாழ்வதும், அம்மரபினரால் அரசு செய்யப் பெற்றதும் ஆகிய நாடு.
இதுமேன் மழநாடு, கீழ் மழநாடு முதலிய பல பிரிவுகளையுடைய
தென்றறியப்படும். திருப்பாசசிலாச் சிராமத்தைத் தலை நகராகக் கொண்டு
கொல்லி மழவன்
அரசு புரிந்த நாடும் மழநாட்டின் ஒரு பிரிவு. அது கீழ்
மழநாடு என்பது போலும். கொல்லி மழவனும் அவனது மரபினரும் வழி
வழியாகச் சிவனடிச் சார்புடைய சைவமரபு அரசர்கள் என்பது, "மறிவளருங்
கையார் பாதம் பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினால்"
(திருஞான - புரா - 312) என்றமையாலும், பிறவாற்றாலும் அறியப்படும்.
மழநாடு சோழ நாட்டின் ஒரு பகுதி. மழவ அரசர்களும் சோழ மன்னர்களின்
கீழ் வாழ்ந்த சிற்றரசர்களில் ஒருவராகும் என்ப. கொங்கு மழநாடு என்ற ஒரு
பகுதியும் உண்டு. பிற வரலாறுகள் சரித ஆயாய்ச்சிக் குறிப்பிற் கண்டு
கொள்க.

     நீர் நாடு - நீர் வளம் பொருந்திய நாடு என்க. "அலைமலிந்த புனல்"
என்பது முதனூல். அதனை வழி நூலுள் (திருவந்தாதி) "விரிபுனல்" என்றார்.
அதனையே ஆசிரியர் "நீர்" என்றனர்.

     நீடு வளத்தது - நீடு முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகை.
இவ்வாக்கின் பயனாக இந்நாளிலும் இந்நாடு நீடும் வளமுடையதாய்
விளங்குதல் கண்கூடு.

     சராசரமெல்லாம் சந்த இசைமயமாக்கிய ஆனாய நாயனாரது
சரிதமாதலின் சந்தப்பா யாப்பினால் ஆசிரியர் தொடக்கம் செய்கின்ற நயம்
காண்க. 1

927.
நீவி நிதம்ப வுழத்தியர் நெய்க்குழன் மைச்சூழல்
மேவி யுறங்குவ மென்சிறை வண்டு; விரைக்கஞ்சப்
பூவி லுறங்குவ நீள்கயல்; பூமலி தேமாவின்
காவி னறுங்குளிர் நீழலு றங்குவ கார்மேதி.2

     (இ-ள்.) நீவி......வண்டு - கொய்சகம் வைத்து உடுத்திய ஆடையை
மேலணிந்த அல்குலையுடைய உழத்தியர்களது நெய் பூசிய குழலின் கரிய
சூழலைப் பொருந்தி மெல்லிய சிறையினையுடைய வண்டுகள் உறங்குவன;
விரை.....கயல் - வாசனையுடைய தாமரைப் பூவில் நீண்ட கயல் மீன்கள்
உறங்குவன; பூமலி........கார் மேதி. தேமாஞ் சோலையின் நறிய மணமும்
குளிர்ச்சியு முடைய நீழலில் கார்மேதி உறங்குவன.