பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1195

 

     (வி-ரை.) நீவி - கொய்சகம். பெண்கள் ஆடை உடுக்கும் வகையுள்
ஒன்று; உழத்தியர் உடுக்குமியல்பு குறித்தது.

     நெய்க்குழல் - நெய் - மயிர்ச்சாந்து. மைச் சூழலில் என்க. கரிய
குழலின் செறிவு.

     மென் சிறைவண்டு - நீள் கயல் - கார் மேதி என இம்மூன்றின்
தன்மைகளை உணர்த்துமாறு அடைமொழிகள் புணர்த்திய நயம் காண்க.

     வண்டும், கயலும், மேதியும் இவைதானும் முறையே நெய்க்குழற்
குழலிலும், விரைக் கஞ்சத்திலும், நறுந்தேமா நீழலிலும், உறங்குவ
என்றதனால் இச்சரிதத்தினுள் இசையின் வாசனை யறியாத "நிற்பனவும்
சரிப்பனவும் இசை மயமாய், மெய் வாழும் புலன்கரண மேவிய
வொன்றாயின" என்ற நிகழ்ச்சியைப் பகுத்தறிவற்ற அஃறிணையாகிய இப்
பிராணிகளின் வைத்துக் கண்டு காட்டும் ஆசிரியரது தெய்வக்
கண்காட்சித்திறம் கண்டு களிக்க. 961 முதலியவற்றில் உரைத்தவையும்
பார்க்க.

     வண்டு, குழற்சூழல் மேவி உறங்குவ; கயல், பூவில் உறங்குவ; மேதி,
நறு நீழல் உறங்குவ எனக்கூட்டி உரைத்துக் கொள்க. வைப்பு முறை மாற்றி
எழுவாய்கள் மூன்றும் பின் வைத்தோதினார், அவை உறக்கத்தின்
மயங்கியதும் வாசனையின் மயங்கியதும் ஆகிய மாறுதல் அறிவிக்கும்
குறிப்புப்பற்றி. 2

928.


வன்னிலை மள்ள ருகைப்ப வெழுந்த மரக்கோவை
பன்முறை வந்ததெழு மோசை பயின்ற முழக்கத்தால்
அன்ன மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்ன லடும்புகை யான்முகில் செய்வ கருப்பாலை.



3

     (இ-ள்.) கருப்பாலை - கரும்பு ஆலைகள்; வன்னிலை.........முழக்கத்தால்
- வலிமையினால் மள்ளர்கள் செலுத்த எழுந்த இணைமரங்கள் பல முறையும்
சுற்றி வருதலால் எழும் ஓசை பயின்ற முழக்கத்தாலும்; அன்னம்......புகையால்
- பக்கங்களில் அன்னங்கள் தங்குகின்ற குளிர்ந்த துறையையுடைய
வாவிகளின் பக்கத்தில் கருப்பஞ்சாறு காய்ச்சுகின்ற புகையினாலும்; முகில்
செய்வ - முகிலின் காட்சி போன்ற தன்மையைக் காட்டுவன.

     (வி-ரை.) வன்னிலை - வலிய நிலை. மள்ளர் வன்னிலையால்
உகைப்ப என்க. வலிய நிலையாவது வலிய கரும்பினை அடுதற்குரிய
வன்மை. நிலை - நிலையினால். வன்னிலையான மள்ளர் என்று கூட்டி
உரைத்தலுமொன்று.

     மரக்கோவை - கரும்பு அடுதலுக்காக - சாறு பிழிதலுக்காக -
மரங்களை இணைத்துச் சுற்றிடும் ஆலையமைப்பு.

     பன்முறை வந்து எழும் ஓசை - பல முறையும் ஆலையைச்
சுற்றிவரச் செய்தலால் உளதாம் ஓசை. முழக்கம் - பேரோசை. வந்து -
வருதலால். ஆலையாக இணைத்த மரங்கள் சுற்றுதலாலும், அவை வலிய
கரும்பினை உடைத்துச் சாறு பிழிதலின் உண்டாகும் வலிய முயற்சியாலும்
எழும் ஓசை பெரிதாம் என்க. "கருஞ்சகட மிளகவளர் கரும்பு" என்ற
ஆளுடையபிள்ளையாரது திருக்கழுமலத் தேவாரத்தால் ஆலைக்கும்
வலியனவாயுள்ள கரும்புகளின் நிலை குறிக்கப்பட்டது காண்க.

     ஓசை பயின்ற முழக்கம் - பல ஓசைகளும் கூடியதனால்
முழக்கமாயிற்று. பயின் - பல ஒன்று கூடுதல் குறித்தது. நீங்காத என்றலுமாம்.

     முழக்கத்தால் - புகையால் - வாவியதன் பால் - கருப்பாலை - முகில்
செய்வ எனக் கூட்டி முடிக்க.

     முழக்கத்தாலும் புகையாலும் முகில்செய்வ என்பதாம்.
எண்ணும்மைகள் தொக்கன. செய்வ - உவமவுருபு. உருவும் வினையும் பற்றி
வந்த உவமை.