பெய்கழல் கீழ் - வீரக்கழலினையணிந்த திருவடியில், விரை ஆர்ந்த - மணம் நிறைந்த, மலர் - மலர்களை, தூவேன் - இட்டு வழிபடேன்; வியந்து அலறேன் - அதிசயித்து அலறேன்; நயந்து உருகேன் - வியம்பியுருகேன்; நான் ஆம் ஆறு என் - நான் உய்தற்குத் தகுதியாகும் வகை யாது? தரியேன் - (இவ்வாறு பயனின்றி இருத்தலைப்) பொறுக்கமாட்டேன்; நான் சாவேன் சாவேன் - நான் இறப்பேன் இறப்பேன். விளக்கம் : இறைவன் விளங்கித் தோன்றுமிடம் நெஞ்சத் தாமரை. இதைச் சிதாகாசம் என்று கூறுவராகலின், ‘அம்பரவா’ என்றும், இக்காட்சி பக்குவப்பட்ட ஆன்மாக்களாலன்றி எல்லோராலும் காண முடியாததாகையால் தில்லையில் சகலரும் காணப் பொதுவினில் நின்று நடமாடுகிறான் என்பதை விளக்க, ‘அம்பலத்தெம் பெரியானே’ என்றும் கூறினார். தம்மையாட்கொண்ட பெருமானை முக்கரணங்களாலும் வழிபட வேண்டும் என்பார், ‘மலர் தூவேன், வியந்தலறேன், நயந்துருகேன்’ என்றார். ‘இவ்வாறு வாழ்வதில் பயன் யாதுளது?’ என்பார், ‘தரியேன் சாவேன்’ என்றார். வாழ்தலில் தமக்குள்ள வெறுப்பைக் காட்டுவார், ‘சாவேன் சாவேன்’ என்று அடுக்கிக் கூறினார். இதனால், இறைவனை முக்கரணங்களாலும் வழிபாடு செய்யாது வாழ்தலைவிட இறப்பதே மேல் என்பது கூறப்பட்டது. 18 வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே. பதப்பொருள் : வேனில் வேள் - வசந்த காலத்திற்குத் தலைவனாகிய மன்மதனுடைய, மலர்க்கணைக்கும் - மலர் அம்புகளாலும், வெள் நகை - வெண்மையான பற்களையும், செவ்வாய் - சிவந்த வாயினையும், கரிய பானல் ஆர் கண்ணி யர்க்கும் - கருங்குவளை மலர் போன்ற கண்களையும் உடைய மங்கையராலும், பதைத்து உருகும் - பதைப்புற்றுக் கரையும், பாழ்நெஞ்சே - பயனற்ற மனமே, ஊன் எல்லாம் நின்று உருக - உடம்பு முழுதும் கனிந்து அமுதூறி உருகும்படியாக, புகுந்து ஆண்டாள் - எழுந்தருளி வந்த உள்ளத்தே நிலைபெற்று ஆட்கொண்டருளிய பெருமான், இன்று போய் - இப்போது நம்மை நீங்கிச் சென்று, வான் உளான் - ஞான ஆகாயத்தின்கண் இருக்கின்றான், நீ காணாய் - அவனை நீ காண முயல மாட்டாய்; மாளா - நீ இறந்தொழியாது, வாழ்கின்றாய் - இன்னும் நிலைத்திருக்கின்றாய், (இஃது என்னை?) விளக்கம் : மன்மதன் ஆட்சி செய்கின்ற காலம் வசந்த காலமாதலால், ‘வேனில் வேள்’ என்றார். தாமரை மலர், மாமலர்
|