அசோக மலர், முல்லை மலர், நீலமலர் என்பன மன்மதனுடைய மலர் அம்புகளாம். நகை - பல். வாய் - இதழ். வெண்மை செம்மை கருமை என்பன முரண் தொடையாய் நின்று இன்புறுத்துவன. கணைக்குப் பதைப்பதும், கண்ணியர்க்கு உருகுவதும் உலகியலில் காணப்படுவனவாதலால், ‘கணைக்குப் பதைத்துக் கண்ணியர்க்கு உருகும்’ எனக் கூட்டிப் பொருள் கூறினும் அமையும். இறைவன் திருப்பெருந்துறையில் குருத்தமர நீழலின்கண் குருவாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டதை நினைவுபடுத்தி, ‘ஊன் எலாம் நின்றுருகப் புகுந்தாண்டான்’ என்றார். இறைவன் தங்கியிருக்குமிடம் பரவெளியாதலின், ‘இன்று போய் வானுளான்’ என்றார். அவனைச் சென்று அடையாது வாழ்கின்ற வாழ்வு வாழ்வாகாதாதலால், ‘நீ மாளா வாழ்கின்றாயே’ என்றார். இதனால், நிலையில்லாச் சிற்றின்பத்தை நாடுவதை விடுத்து நிலையான பேரின்பத்தை நாடுவதே சிறப்புடையதாம் என்பது கூறப்பட்டது. 19 வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய வெள்ளத்தே. பதப்பொருள் : வாழாத நெஞ்சமே - பேரின்ப வாழ்க்கையைப் பெற்று வாழக் கருதாத மனமே, வாழ்கின்றாய் - நீ வீணாக உலகிலே நிலைத் திருக்கின்றாய், வல்வினைப்பட்டு - கொடிய வினையில் அகப்பட்டு, ஆழ்கின்றாய் - துயரத்தில் அழுந்துகின்றாய்; ஆழாமல் - அங்ஙனம் அழுந்தாமல், காப்பானை - நம்மை எடுத்துக் காக்கின்ற இறைவனை, ஏத்தாதே - வழிபடாமல், உனக்குக் கேடு சூழ்கின்றாய் - உனக்குக் கெடுதியே உண்டாக்கிக் கொள்ள எண்ணுகின்றாய், பல்காலும் சொல்கின்றேன் - பல முறையும் உனக்கு அறிவுரை இயம்புகின்றேன்; நீ அவலக்கடல் ஆய வெள்ளத்து - நீ துன்பக் கடலாகிய பெருவெள்ளத்திலே, வீழ்கின்றாய் - வீழ்ந்தொழிகின்றாய்; (இஃது உன் நிலை.) விளக்கம் : வினையினால் பிறவி உண்டாகிறது. பிறவி எடுத்த பின்னர் மீண்டும் வினை ஏறுகிறது. வினையும் பிறப்பும் தொடர் சங்கிலி போன்ற முடிவு இல்லாது உள்ளன. வினைப் பிறவி சாராமே தடுப்பதற்கு இறைவனது புகழையே பாட வேண்டும். அவ்வாறு பாடுவதற்குத் தம் மனம் செல்லவில்லை என்பார், ‘வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே’ என்று தம் மனத்தை நோக்கிக் கூறினார்.
|