"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்றார் நாயனாரும். இறைவன் புகழைப் பாடாமையினால் துன்பக் கடலிலே தான் மூழ்க வேண்டியுள்ளது என்று வருந்துவார், ‘வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே’ என்றார். வாழ்வதைவிட இறப்பதால் வினை ஏறாமலாவது இருக்கும் என்று எண்ணுவார், ‘நெஞ்சமே வாழ்கின்றாய்’ என்று மனத்தை நோக்கிக் கூறினார். இதனால், இறைவனது திருவடியை இறைஞ்சாது போனால் துன்பமே வந்து சாரும் என்பது கூறப்பட்டது. 20 3. சுட்டறுத்தல் சுட்டறுத்தலாவது, ‘இது குடம்; இது படம்’ என்பது போலச் சுட்டியறியும் அறிவை அறுத்தலாம். உலகியற்பொருள்களை உடல் உறுப்புகளின் துணைகொண்டு சுட்டி அறியலாம்; இறைவனை அறிதல், மெய்யுணர்வினாலன்றி இயலாது என்று உணர்ந்து அவனை அருளால் அறிதலாம். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க் குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம் கண்ணிணையும் மரமாந்தீ வினையி னேற்கே. பதப்பொருள் : வெள்ளம் தாழ் - கங்கை நீர்ப்பெருக்குத் தங்கிய, விரிசடையாய் - விரிந்த சடையினையுடையாய், விடையாய் - எருதினை ஊர்தியாக உடையாய், விண்ணோர் பெருமானே - தேவர் தலைவனே, எனக் கேட்டு - என்று அன்பர் சொல்லக் கேட்டவுடனே, வேட்ட நெஞ்சாய் - ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளம் தாழ் உறு புனலின் - பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, கீழ்மேல் ஆக - மேல் கீழாக விழுந்து, பதைத்து உருகும் அவர் நிற்க - வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னை ஆண்டாய்க்கு - என்னைப் பெருங்கருணையால் ஆண்டுகொண்ட உன்பொருட்டு, உள்ளந்தாள் நின்று - என் உள்ளங்கால் முதல், உச்சி அளவும் - உச்சி வரையுள்ள உடம்பின் பகுதி முற்றும், நெஞ்சு ஆய் - மனத்தின் இயல்புடையதாய், உருகாது - உருகவில்லை; உடம்பு எல்லாம் - உடம்பு முழுதும், கண் ஆய் - கண்ணின் இயல்புடையதாய்,
|