அண்ணா - அண்ட முடியாத, வெள்ளம் பாயாது - நீர்ப் பெருக்குப் பாயவில்லை; ஆகையால், தீவினையினேற்கு - கொடிய வினையையுடை யேனுக்கு, நெஞ்சம் கல் ஆம் - நெஞ்சானது கல்லினால் அமைந்ததேயாம்; கண் இணையும் - இரு கண்களும், மரம் ஆம் - மரத்தினாலாயவையேயாம். விளக்கம் : விரிசடையில் தங்கியது கங்கையாதலால், வெள்ளம் என்பதற்குக் கங்கை எனப் பொருளுரைக்கப்பட்டது. இறைவன் கங்கையை முடியில் தாங்கி உலகைக் காத்தான்; விடையை ஊர்தியாகக் கொண்டு அறத்தை வளர்த்தான்; ஆதலால், தலைவன் எனப்பட்டான் என்பார், ‘விரிசடையாய், விடையாய், விண்ணோர் பெருமானே’ என்றார். இறைவனது கருணைச்செயலைக் கேட்ட மாத்திரத்தே அடியார்கள் மனம் கங்கை வெள்ளம் போன்று வேகமாய் உருகி ஓடும் என்பார். ‘பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேலாகப் பதைத்துருகும்’ என்றார். ‘ஆயினும், அவ்வடியார் களை விடுத்து ஒன்றுக்கும் பற்றாத என்னை ஆண்டமைக்கு உடம்பு முழுதும் மனமாக இருந்து உருகுவதோடு கண்ணாகவும் இருந்து அழ வேண்டும்’ என்பார். ‘உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகாதால்; உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா, வெள்ளந்தான் பாயாதால்’ என்றார். அவ்விரண்டனையும் செய்யாமையால், ‘நெஞ்சம் கல்லாம் கண்ணிணையும் மரமாம்’ என்றார். உலோகப் பொருள்கள் உருகும்; கல் உருகாது. அதனால், நெஞ்சத்தைக் கல் என்றார். ‘நெஞ்சக் கனகல்’ என்றார், அருணகிரிநாதர். மரத்தின் கண்களுக்குக் ‘கண்’ என்ற பெயர் உண்டு. அதற்கு நீர் வடிக்கும் தன்மை இல்லை. அதனால், கண்ணை ‘மரம்’ என்றார். ‘வன்பராய் முருடொக்கும்’ என் சிந்தை மரக்கண்; "என் செவி இரும்பினும் வலிது" என்று பின்னும் கூறுவர் (23.4). "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்" என்று முத்தொள்ளாயிரத்திலும் கூறப்பட்டது. இதற்குக் காரணம் வினை என்பார், ‘தீவினையினேற்கே’ என்றார். இதனால், இறைவனது பெருங்கருணைத் திறத்தை எண்ணி உருகி அழ வேண்டுமென்பது கூறப்பட்டது. 21 வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை அனையநான பாடேன்நின் றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோநான் ஆன வாறு முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே.
|