என்னும் திருப்பாட்டானுணரலாம். ஈண்டுக் கூறும் வேதாந்தம் தமிழ்வேதாந்தம் என்க. தழல் வண்ணனாகிய சிவபெருமான் செய்தருளும் இருவகை நலமும் விளக்குவது 'சார்ந்தவர்க்' (2075) என்னும் திருப்பாட்டு. சித்தாந்த நெறியினர் சித்தர் எனப்படுவர். அவர்தம் அருமறை 'சிவய சிவ' அதுவே தமிழ்மண்டிலம் ஐந்து. அதுவே மெய்ஞ்ஞானம், அதனை எங்கணும் பரப்புவோர் சித்தர். இவ் வுண்மை 'தமிழ் மண்டலம்' (1619) என்னும் திருப்பாட்டானுணரலாம். அறிந்தோர் சிவபெருமான் திருவடியான்றி மற்று யார் பாடுஞ்சாரார் என்னை? 'சிவபொருன் திருவடியே சேரப் பெற்றார் ஆதலா'னென்க. அஃது 'ஆராலும்' (2920) என்னும் திருப்பாட்டான் உணரலாம். 'சங்கத்தரு' (85) என்னும் திருச்சிற்றம்பலக் கோவையாரின் திருப்பாட்டு இதனோ டொத்து இன்புறற்பாலது. பயிற்றும் பள்ளி பன்னிரு திருமுறையும் பதினான்குமெய்கண்ட நூற்களும் பயிற்றும் பொதுப்பள்ளி திருக்கோவில்களாகும். பயில்வார் கற்றவரும் மற்றவரும் பெருமக்களுமாவர். பயிற்றுவிப்பார் திருக்கோவில் அந்தணக் குருக்கண்மார்களும், அறங்காவலரும், அதற்கென அமர்த்தப்பட்ட ஆசிரியன்மார்களும் ஆவர். மேற் குறித்த தெய்வத் தமிழ்நூல்கள் ஓதற்கும் ஓதுவிப்பதற்குமுரிய சிறப்புப்பள்ளி திருமடங்களாகும். பயில்வார் அறவோரும் துறவோரும் ஆவர். பயிற்றுவிப்பார் திருமடத் தலைவர்களும் அதற்கென அமர்த்தப்பட்ட ஆசிரியன்மார்களுமாவர். தொழுகைக் கூடங்களும் திருமட மாண்பைச் சேர்ந்ததே. அனைவர்களும் பயின்றவற்றை நினைவு கூரும் நிலையம் அவரவர்களின் இல்லங்களாகும். இவ்வாறல்லாமல் அவற்றைப் பயில்வது எவர்க்கும் ஒல்லாது. இவற்றைப் பயிலாமல் சிவ மெய்யுணர்வு எவர்க்கும் கைவரப்பெறாது. கல்லூரிகளில் இவற்றின் சாரமாகிய பிழிவுகளும் குறிப்புகளும் உளங்கொளுமாறு அளவாகக் கற்பித்தல் வேண்டும். இவைகள் அனைத்தும் தனித்தமிழ் முதல் நூற்களே. எந்த அயன் மொழியினின்றும் மொழி பெயர்த்தவை யல்ல. நாள் விழா, சிறப்புவிழா, குடமுழுக்கு முதலிய வழிபாடுகளனைத்திலும் இவ்வருள் நூற்கள் ஓதியே வழிபடுவித்தல் வேண்டும்; வழிபடுதலும் வேண்டும். சமய உண்மைகள் உணராதார் எங்ஙனம் அமைதியாக வழிபடுவர்? திருக்கோவில்களில் அமைதி நிலவ வேண்டுமென வாளா சொல்லுவதால் மட்டும் யாது பயன்?
|