திருமூலர் தம்முடைய நூலில் ஓரிடத்திலும் நால்வர் நந்திகள் இன்னார் என்று அவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. அவருக்குப் பின்னால் வந்த பெரியோர்கள் சனகர் - சனந்தனர் - சனாதனர் - சனற்குமார் என்றனர். பதஞ்சலி என்ற பேர் உடையவர்கள் பலபேர் அக்காலத்திலேயே இருந்ததால் அம் மயக்கம் ஒழிய, தம்முடன் கூட இருந்த ஒருசாலை மாணாக்கராகிய பதஞ்சலியைக் குறிப்பிடவே திருமூலர் "மன்று தொழுத" என்று அடைகொடுத்துக் கூறுவார் ஆயினர். ஏனைய பதஞ்சலிகள் எல்லாம் மன்று தொழுதவர்கள் அல்லர். வியாக்கிரமர் என்பார் வியாக்கிரபாதர் - வியாக்கிரபதர் - புலிக்கால் முனிவர் என்று பலவாறாகப் பேசப்படுவர். ஆதலின், இவ்வெண்மரும் சம காலத்தவர்கள் ஆவார்கள். இவர்கள் எல்லாரும் கயிலாயத்தில் உள்ள சித்தர் குழாஅத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலினாலன்றே உமாபதி சிவாச்சாரியார் திருமூலரைக் குறிப்பிடும்போது "கயிலாயத்தொரு சித்தர்" என்றார். (இ) பதஞ்சலிகள் பலர் என்பது டாக்டர் எ. பி. கீத் (Dr. A. B. Keith) என்பவர் வடமொழியில் மகாபாஷியம் இயற்றிய பதஞ்சலி வேறு என்றும், யோக சூத்திரம் இயற்றிய பதஞ்சலி வேறு என்றும், முன்னவர் கி. மு. 150-லும் பின்னவர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டிலும் இருந்தவர்கள் என்றும் சரித்திர நூல் ஆராய்ச்சியுடன் கூறுகின்றார். சிலர் திருமூலர் தம் நூலில் கூறிய பதஞ்சலி, மகாபாடியம் இயற்றியவர் தாமோ என்று கொண்டு, திருமூலரின் காலம் கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என்றும், சிலர் திருமூலர் கூறியது, யோக சூத்திரம் செய்த பதஞ்சலி தாமோ என்று கொண்டு, திருமூலரின் காலம் கி. பி. 7-ஆம் நூற்றாண்டு என்றும் கூறாநிற்பர். இத்தகைய இடர்ப்பாடுகள் வரும் என்றே திருமூலர் தமது ஞானக்கண்ணால் அறிந்து, தம்முடன் கூட இருந்தவரை "மன்று தொழுத பதஞ்சலி" என்று அடை கொடுத்துக் கூறி மயக்கத்தை ஒழித்தார். மேலும் தாம் கூறிய தமிழ் மூவாயிரச் செய்யுளில் பதஞ்சலி ஒருவருக்கு மாத்திரம் அடை கொடுத்தும் மற்றவர்களைப் பெயர் மாத்திரத்திலும் கூறியிருப்பதை நோக்க, திருமூலநாயனாருடைய கருத்து விளங்கும்.
|