11. "அந்தண்மை பூண்ட அறவோர் ஆகமத்துச் சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி." - தமிழ் மூவாயிரம் "அந்தணர் என்போர் அறவோர்." - திருக்குறள் இன்னும் எத்துணையோ உள. விரிவஞ்சி விடுத்தாம். இதனால் தமிழ் மூவாயிரம் திருவள்ளுவர் காலத்துக்கு முற்பட்டது என்றும், இப்போது தமிழில் உள்ள தத்துவ நூல்களில் தலையாயது என்றும், திருவள்ளுவர் - பட்டினத்தார் - தாயுமானவர் போன்ற பெரியார்கள் எல்லாம் படித்துச் சுவைத்து இன்புற்றது என்றும் அறிந்தாம். (ஓ) திருமூலர் இரண்டாம் தடவை தென்னாடு வந்தது திருமூலர் இரண்டாம் தடவை தென்னாட்டுக்கு வந்த வரலாற்றைப்பற்றி விரிவாய்ப் பெரிய புராணத்தில், கூறப்பட்டிருக்கிறது. அச்சரித்திரத்தைத்தான் பல பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆதலின், அதனை யாம் இங்குக் கூறவில்லை. பெரிய புராணத்தில் கண்டு கொள்க. (ஒள) தமிழ் மூவாயிரம் மொழி பெயர்ப்பு அல்ல என்பது "தமிழ் மூவாயிரம்" என்னும் நூலுக்குத் "திருமந்திரம்" என்று ஒரு பெயர் உண்டென்று நாம் முன்னமே கூறியுள்ளாம். திருவாளர் மா. வே. விசுவநாத பிள்ளை அவர்கள் பதிப்பில் நூன்முகத்தில் பக்கம் 8-இல் "திருமூலர் தம்முடைய தவப் பயனாய் விளங்கும் இந் நூலைத் திருமந்திரமாலிகை எனப் பெயரிட்டு விடுத்தார்போலும். 'மாலிகா' என்ற வடமொழிக் கிளவி சிறுமாலை எனப் பொருள்படும்" என்றும், பக்கம் 15 - இல் அடிக்குறிப்பில், "ஸ்ரீ மந்திர மாலிகா என்னும் ஞானநூல் முதலில் வடமொழியில் ஆக்கப்பட்டதெனக் கொள்வதற்கு இடமுண்டு. உபமன்யு பக்த விலாசத்தில் பகரும் வாய்மையை நோக்கின் இத் திருமந்திரத்தின் முதல்நூல் வடமொழியில் உளது என்பது போதரும்" என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனை எழுதியவருடைய துணிபே துணிபு. "நேர்நின்று காக்கை வெளிதென்பார் என் சொலார்" என்னும் சொற்றொடர்ப் பொருட்கு இலக்காகியவர். இத்தகைய தவறான வாக்கியங்களையும் ஒரு பெரிய நூலின் நூன்முகத்தில் பதித்துள்ளதுதான் வேடிக்கை. வடமொழியினின்றுமே தமிழ்நூல்கள் எல்லாம் வந்தன என்று கூறுதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் குழாஅத்தின் அங்கத்தினருள் நூன்முகம் எழுதியவரும் ஒருவர் ஆவர்.
|