பக்கம் எண் :

669
 

(அ. சி.) ஆகின்ற - எல்லாம் உண்டாக்குகின்ற. கலை - சந்திரன். கதிர் - சூரியன். அத் திசை பத்தி - பத்துத் திக்குகளைக்கொண்ட உலகம்.

(3)

1703. அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

(ப. இ.) பத்துத் திசைக்கும் உட்பட்ட உலகத்தில் அவ்வுலகம் நன்கு நடைபெறும் பொருட்டு ஆறு அங்கங்களும், நான்கு வேதங்களும், சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நன்னெறி நான்மைகளும் அவற்றைச் சிறப்பாகக்கொண்டு திகழும் செந்நெறியும் சித்தாந்த சைவமும் அத்திருவருளால் நிலைப்பன. சித்தாந்த சைவம் ஐம்பெரும் தூண்களால் தாங்கப்பட்டு நிலைநிற்கின்றது. அவை முறையே திருமூல நாயனாரருளிய இத் திருமந்திரமும் 'மொழிக்குமொழி தித்திக்கும் மூவர் சொல்லமிழ்தாமகிய' தேவாரங்களும், களிக்கும் அருட்டேன் அளிக்கும் விழுமிய திருவாசகம் திருக்கோவையாகும் என்க. இவ் வுண்மை வருமாறு:

"நம்மூல ராற்போற்ற நால்வரால் நாட்டநிலை
செம்பொருட்சித் தாந்தசைவம் தேறுங்கால்-நம்மறையாம்
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
டைந்துசால் பூன்றிய தூண்."

(அ. சி.) அத் திசைக்குள் - மேலே கூறிய பத்துத் திக்குகளுக்கு உட்பட்ட உலகத்தில்.

(4)

1704. சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசிஈ ராறுள
சமயத் தெழுந்த சரீரமா றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

(ப. இ.) சித்தாந்த சைவத்திற் கூறப்படும் நிலைகள் பத்து. இவை ஐந்து அவத்தைகள் மேல்நோக்கியும் ஐந்து அவத்தைகள் கீழ்நோக்கியும் உயிர் சென்று வருங்கால் நிகழ்வன. மேலும் உயிர்ப்புக்கலைகள் பன்னிரண்டுள்ளன. அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன், அன்னை என்னும் திருமேனிகள் ஆறு; பூதமைந்து, ஞாயிறு, திங்கள், ஆருயிர் மூன்று ஆகிய வடிவங்கள் எட்டு. இவையனைத்தும் பூண்டருள்வோன் அருளோன் ஆகிய சதாசிவனேயாவன்.

(அ. சி.) அவத்தை - மேலாலவத்தை, கீழாலவத்தை. இராசி - மேட முதலிய இராசிகள். சரீரமாறு - பிரமனாதி சத்தி ஈறாக ஆறு. எட்டு - பிருதிவியாதி வடிவம் எட்டு.

(5)

1705. நடுவு கிழக்குத் தெற்குத் தரமெற்கு
நடுவு படிகநற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனஞ் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகமிவை அஞ்சே.