பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை864

1251.மன்னங் கனை!செந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர் வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத் தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும் பாலுமவ் வேந்தலுக்கே.

70

 

என்னும் முறைப்படி உன் மகள் இனி அவனுக்கே உரியள்" என்பது குறிப்பால் தோன்றக் கூறினாள். வாள் நுதல், தலைவி. மன்னன் - அரசர் குலத்தினனாய தலைவன். "நன்றோ" என்றதில் ஓகாரம் எதிர்மறைப் பொருட்டாய், "கன்னியை யுடையாள் ஒருத்தியை அரசர் குலத்தினாராகிய நீவிர் திடுமெனப் போந்து தீண்டியது நன்றன்று" எனவும், ஓகாரம் சிறப்புப் பொருட்டாய் "கன்னிப் பெண்ணைத் தீண்டும் முன் அவளை மணந்து கொள்ளத் துணிந்தே நெறியுடைய ஆடவர் தீண்டுவர் ஆதலின், 'நீரும் அத்துணிவினையுடையீர்' என்பதனை அறிய நன்றாகின்றது" எனவும் இருபொருளும் தந்தது. இவ்வாற்றால் முதலில், 'நின் மகள் நம் குடிக்குப் பழி யுண்டாக ஒழுகினாள் அல்லள்' எனவும் 'தெய்வத்தால் நிகழ்ந்த இந்நிலைமையால் நின்மகள் குடிப் பிறந்தார்க்கு உரிய அறத்தையே பற்றி நின்று, தன்னை அவனுக்கு உரியளாகக் கருதிவிட்டாள்' எனவும் கூறினாள். "மதி" என்பதைச் சந்திரனாகக் கொண்டு நுதலுக்கு உவமை யாக்காது, 'புத்தி' எனக் கொண்டு, தலைவியது முதுக் குறைவைப் புகழ்ந்ததாக உரைத்தல் சிறப்பு.

1251. குறிப்புரை: இப்பாட்டும் முன்னது போலவே தோழி செவிலிக்குக் களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

"மன்னங்கனை" என்பதை, "மன் அங்கு அனை" - எனப் பிரித்து, 'அனை - அன்னையே என உரைத்து, "மன் அங்கு" என்பதை எடுத்தாற்கு என்பதன் பின்னர்க் கூட்டி, 'இது நிகழ்ந்த அங்கு' என உரைக்க. இவ்வாறன்றி, தோழி செவிலியை, 'அங்கனாய்' என விளித்தல் பொருந்தாது. அன்னங்கள் - அனங்களே! என்றது மகளிர் கூட்டத்தை. அடர் - தாக்க வந்த வேழம் - களிறு; ஆண் யானை இடை விலங்கி - குறுக்கே தடுத்து, பொன் அம் கலை சா வகை - எடுத்தாற்கு - பொன்போலும் அழகிய ஆண், மான்தன் பெண் மானைக் காக்கத் தன் உயிரையும் விடத் துணிந்ததுபோலத் துணிந்து எடுத்துக் காத்த அவனுக்கு, இதன்பின் 'உரித்தாக' என ஒரு சொல் வருவிக்க. உரித்தாயது, பூணின் அழுத்தம். உள ஆம் - உளவாகலாம், "உள" என்ற பன்மையால், தழும்புகள் பலவாதல் பெறப்பட்டது. 'உள' எனத் துணிந்து கூறின் பின்னரும் அவனோடு பலநாள் பழகியதாகும் ஆதலின், பெரும்பாலும் உள ஆகலாம்' என ஊகமாகக் கூறினாள். இதனால், தலைவி தலைவனை இறுகத் தழுவிக் கொண்டமை கூறினாளாயிற்று.