பக்கம் எண் :

863ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1249.தேறும் புனல்தில்லைச் சிற்றம் பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட் டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே.

68

1250.நிதியுறு வாரற னின்பம்வீ டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர் கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.

69

 

உறு - வண்டுகள் உண்ணக் களிப்பைத் தருகின்ற. வெளி உறு ஞாலம் - பகற் காலத்தில் ஒளியைப் பெற்று மகிழ்கின்ற உலகம் விரை - நறுமணம். அளி - வண்டு. தாது அணைந்து - மகரந்தத்தில் மூழ்கி. ஆழி அழைப்ப - கடல் ஒலியை உண்டாக்கும்படி. துளி உறு வாடை - மழைத் துளியோடு பொருந்தி வரும் வாடைக் காற்று. மட மான் - தலைவி 'ஞாலம் பகலை இழந்தால் (இரவில்) மட மானைத் துவள்விப்பது வாடையாகிய இதுவாம்' என இயைத்து முடிக்க. 'அதுபொழுது எனக்கு அவளை ஆற்றுவித்தல் அரிது' என்பது குறிப்பெச்சம் இதனால் தலைவன் செலவழுங்குதல் பயன்.

1249. குறிப்புரை: தேறும் புனல் - தெளிவாகிய நீர் வழிமொழி "சுரருலகு நரர்கள் பயில்" - எனத் தொடங்கும் 'வழிமொழித் திருவிராக'த் திருப்பதிகம்1 அலங்கல் - தாமரை மலர் மாலை. 'எந்தத் தலத்தில் உள்ளவரும் தில்லைப் பெருமானே' என்பது பற்றி, அத்திருப்பதிகத்தின் வழிப் பிரமாபுரப் பெம்மானை உள்க எழும் இன்பத்தைத் தில்லைச் சிற்றம் பலத்தினின்றும் வந்து ஊறும் அமிர்தத்தைப் பருகுவதனால் உண்டாகும் இன்பமாகக் கூறினார்.

1250. குறிப்புரை: இப்பாட்டு, தோழி செவிலிக்குப் புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

" - அவனைத் தொழுபவர் அறம் முதலிய நான்கையும் எய்துவா - என வேதம் துதித்தலைப் பொருந்திய காழியர் கோன்" என்க. செய்யுள் நோக்கி நிதி முற் கூறப்பட்டது. 'நதியின் கண், தொழாதார் இனையும்படி (வருந்தும்படி) உறு நீர்' என உரைக்க, "அந்நீரின்கண் அகப்பட்டுக் கலங்கிய உன் மகளைத் தலைவன் ஒருவன் கண்டு எடுத்துக் கரை சேர்த்துத் தெளிவித்து, 'அஞ்சற்க' என்று சொல்ல, இவள், 'அண்ணலே! இது நன்றோ' - எனச் சொல் அவனைப் பாதம் பணிந்தாள்" எனத் தோழி கூறினாள், இதனால், "உற்றாற்கு (மெய் தீண்டினவனுக்கு) உரியர் பொற்றொடி மகளிர்"


1. திருமுறை - 3.67.