பக்கம் எண் :

திருநகரப் படலம்137

 தாழ்ந்தி டாவளத் தருக்கினா லென்கோ
 ஆர்ந்த பல்சன வடர்ச்சி யாலென்கோ
 சோர்ந்து கைத்தலஞ் சுடர்பொற் காசுகள்
 வீழ்ந்த நேடிலார் வீதி வாயினே.

(இ - ள்.) அந் நகரத்தின்கண்ணுள்ள மக்கள் வீதியினிடத்துக் கையின்கண் நின்றும் சோர்வடைதலினால் வீழ்ந்தனவாகிய ஒளிர்கின்ற பொற்காசுகளைத் தேடுவாரிலர். (இங்ஙனம் தேடாதிருத்தற்குக் காரணம்) எஞ்ஞான்றும் குறைவினையடையாத செல்வச் செருக்கா லென்று சொல்வேனோ, அல்லது அவ் வீதியின்கண்ணிறைந்த பல மக்களின் நெருக்கத்தாலென்று சொல்வேனோ யாதென அறியேன்.

(வி - ம்.) வீழ்ந்தன - வீழ்ந்தவற்றை. நேடுதல் - தேடுதல். தாழ்ந்திடாத - குறையாத.

(96)

 பொருண்மை சுட்டிய புகலு மோசைகள்
 பொருண்மை சுட்டிடாப் பொங்கு மோதைபோல்
 மருவு மாட்சியான் மாண்ட கேள்வியார்
 கருது மூங்கையிற் கையிற் பேசுவார்.

(இ - ள்.) பொருளின் தன்மையைக் குறிக்கும் பொருட்டு மிக்கெழுகின்ற ஒலிகள் (பொருளின் தன்மையைக் குறிக்காத மாயகாரிய ஒலிகள்போலப் பொருந்துகின்ற மாட்சியினால் மாட்சியுள்ள கல்வி கேள்வியினையுடைய பெரியோர்கள், (பொருள்களை மனத்தால்) எண்ணுகின்ற ஊமைகள் போலக் கரங்களினாலே பேசுவார்.

(வி - ம்.) பொருண்மை சுட்டிடாப் பொங்குமோதை - மாயகாரிய ஒலி. மூங்கை - ஊமை. கையிற்பேசுதல் - கரங்களினாற் குறித்த பொருளை யறிவித்தல்.

(97)

 ஐந்து மாமுக னாறு மாமுகன்
 நந்தி யாதியோர் நாம வீரராய்
 வந்த வாவட மாதி ரத்தவன்
 அந்தில் வந்தம ரளகை போன்றதே.

(இ - ள்.) ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னுமைந்து முகங்களையுடைய சிவபெருமானும், ஆறுமுகங்களையுடைய முருகப்பெருமானும், அச்சத்தைத் தரத்தக்க வீரர்களாக நந்தியை முதலாகவுடைய கணத் தலைவர்களும் வந்தமர்ந்த தன்மையால் வடதிசைக் கிறைவனாகிய குபேரன் வந்துதங்கும் அளகாபுரியை ஒத்தது. (அந்நகரம்)

(வி - ம்.) ஐந்துமாமுகனும் ஆறுமாமுகனும், நந்தியாதியோரும் வருதலை வீராட்டகாசப் படலம் செருத்தணிதலாலும், நந்தி யுபதேசப் படலத்தானு மறிக. வந்தவா - வந்தவாறு, விகாரம். வந்தவாற்றினால் என மூன்றனுருபும் விரித்துப் பொருள் ெ்காள்க.

(98)