மாற்றப் பின்னர்க் கொணர்ந்து குவித்தனவாகிய பொருள்களும் அங்ஙனமே விலைப்பொருளுக்கு மாற்றப்படுதலால் அவ்வாவண வீதி நன்றாகச் செய்யப்பெற்ற முன்னைய நல்வினைப் பயனானது தன்மாட்டு வந்து பின்னர் நீங்குகின்ற உடம்பினை யொத்தது. (வி - ம்.) தன்னென்றது ஈண்டுடலையென்க. நன்கு - நன்றாக. முன் நல்வினைப்பயன் - முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயனென்க. தனு - உடல். (93) | செம்பொற் சுண்ணமுஞ் செச்சைச் சாந்தமும் | | வம்பு நானமும் வாச மாலையும் | | நம்பி வீழளி நல்கு மாதரார் | | பம்பு யிர்ப்பினாற் பாற வைகுவார். |
(இ - ள்.) சிவந்த பொற்பொடிகளும், சிவந்த சந்தனமும், வாசனையையுடைய கத்தூரியும், மணத்தையுடைய மாலைகளுமாகிய இவற்றின்கண் விரும்பி வீழ்கின்ற வண்டுகள் அப்பொருள்களை விற்கின்ற பெண்கள் தங்கள் நிறைந்த மூக்கின்காற்றா லோட ஆண்டுத் தங்குவார். (வி - ம்.) இப் பொருள்களை விலைசெய் மடவார் யாவரும் முதற்சாதிப் பெண்களாதலின் அவர்கள் மூக்கின்காற்று சண்பகப் பூ வாசனை யுடைத்தாமென்பது நூன்மரபு. வண்டுகள் சண்பகப் பூ வாசனையை யுட்கொள்ளின் இறந்துபடுத லியல்பாகலின் "பண்புயிர்ப்பினாற் பாறவைகுவா" ரென்றார். செச்சை - சிவப்பு. நம்பி - விரும்பி. "நம்பு மேவும் நசையாகும்மே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. பம்புதல் - நிறைதல். பாற - நீங்க. காமதந்திரத்தில் இப் பெண்களை மூவகையாகப் பிரித்துளதாதலின் ஈண்டுக் கூறியவர்கள் முதற்சாதிப்பெண்கள் எனக் கொள்க. (94) | கனிவ ருக்கமுங் கமழ்சிற் றுண்டியும் | | இனிய விற்குந ரிடஞ்சென் முன்னரே | | நனிம ணம்புன னாவிற் றோற்றுமுன் | | பனிம லர்க்கணை படர்கண் டோற்றுமே. |
(இ - ள்.) பழவகைகளும், மணக்கின்ற சிற்றுணாக்களும், இனியனவாகிய பல பொருள்களும் விற்றலைச் செய்கின்ற பெண்களிருக்கின்ற இடங்கட்குச் செல்லுமுன்னரே (அப்பொருள்களின் மிக்க வாசனையானது நாவின்கண்ணே நீரைத் தோற்றுவிக்கும். (அப்பொருளை விற்குமாதரார்) கண்கள் குளிர்ச்சிபொருந்திய நீலோற்பலமாகிய அம்பினால் வருந்துன்ப நினைவையுள்ளே தோற்றுவிக்கும். (வி - ம்.) இனிய - இனியவாகிய பொருள்கள். நீலோற்பலம் கொல்லும் அம்பாகலின் அதனால் வருந்துன்பினை அம்மாதரார் கண்களும் நீலோற்பலம் போறலின் உள்ளே தோற்றுவிக்கு மென்றார். படர் - நினைவு. "படர்நடை நினைப்பு நோவாம்" என்னும் நிகண்டா னறிக. சிற்றுண்டி - பண்ணியவகை. (95) |