| 93. | பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்! ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்! |
| | |
| 94. | தேசம் இறந்தவன் காண்! திசை இறந்த தென் கடல்காண்! ஊசி முனை இன்றி இல்லா உருபொருள்காண்! |
| | |
| 95. | சிப்பியில் முத்தொளிகாண்! சின்மய நோக்கு இல்லார்க்கு அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும்பொருள்காண்! |
| | |
| 96. | ஆல விருட்சமடி! அளவிலாச் சாகையடி! மேலாம் பதங்கள் விசும்புஊடுருவும் மெய்ப்பொருள்காண்! |
| | |
| 97. | வங்கிஷம் எல்லாம் கடந்து மருவா மலர்ப்பதம்காண்! அங்கிஷமாய் எங்கும் ஆழ்ந்த அரும்பொருள்காண்! |
| | |
| 98. | நாமநட்டம் ஆனதடி! நவில இடம் இல்லையடி! காமனைக் கண்ணால் எரிக்கக் கனல் விழித்த காரணன் காண்! |
| | |
| 99. | கொட்டாத சொம்பொனடி! குளியாத் தரளமடி! எட்டாத கொம்பிலடி ஈப்புகாத் தேனமுதம். |
| | |
| 100. | காணிப்பொன் னாணியுடன் கல்லுரைமாற்று இன்னதென்றே ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி! |
| | |
| 101. | அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும் பிளவளவும் தான்சற்றும் பேசாப் பிரமமடி! |
| | |
| 102. | கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல் என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி! |
| | |
| 103. | வேதப் புரவியடி! விரைந்தோடியும் அறியார்; காதற்ற ஞானமடி! காண்பார் கருத்துடையோன். |
| | |
| 104. | பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன் நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி! |
| | |
| 105. | ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்! பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி! |