| 106. | சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டிஎனைத் தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி! |
| | |
| 107. | தான் என்னைப் பார்த்தாண்டி! தன்னைத்தான் அல்லாமல் நான் என்ன சொல்லுவண்டி! நவில இடம் இல்லையடி! |
| | |
| 108. | இன்றிருந்து நாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும் என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி! |
| | |
| 109. | பார்க்கில் எளிது அலவோ? பற்றற்ற பற்று அலவோ? ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி! |
| | |
| 110. | இத்தனை காலமடி இறந்து பிறந்த தெல்லாம் இத்தனையும் இல்லையடி இரும்பில்உறை நீரானேன். |
| | |
| 111. | எக்காலம் பட்டதடி! இறந்து பிறந்ததெல்லாம் அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில். |
| | |
| 112. | காலம் கழிந்ததடி! கர்மம் எல்லாம் போச்சுதடி! நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி! |
| | |
| 113. | முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய் இப்போது வந்தான் காண்! எனை விழுங்கிக் கொண்டான்காண். |
| | |
| 114. | பாலின்கண் நெய் இருந்தாற் போலப் பரஞ்சோதி ஆலிங்கனம் செய்து அறவிழுங்கிக் கொண்டாண்டி! |
| | |
| 115. | செத்தபடம் ஆனேண்டி! தீ இரும்பில் நீரானேன்; ஒத்தவிடம் நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன். |
| | |
| 116. | ஒப்பும் உவமையும் அற்ற ஓத அரிதாய பொருள் இப்புவி யில்குருவே என்னவந்தோன் தாள் வாழி. |
| | |
| 117. | ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும் முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுத்தருள்வார். |