பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்155






1.

இறந்த காலத்து இரங்கல்

குறள் வெண்செந்துறை

வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே.

  
2.மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே;
  
3.வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே.
  
4.ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கெட்டேனே.
  
5.ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே.
  
6.குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே.
  
7.ஆலம் அருந்தும் அரன்பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே.
  
8.பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய்யென்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே.
  
9.கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே.
  
10.எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே.
  
11.சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறாஉடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே.
  
12.தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே.