“மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கண் மற்றவர் மாளும் போது கூடவவர் மாள்வதில்லையே” பாடலோடு ஒத்து விளங்குவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. பழமொழிகள் வாழ்க்கை என்பது பற்றற்று இருக்க வேண்டுமென்பதற்கு ‘அகப்பற்று நீக்கல்’களாகச் சில பழமொழிகளை உதாரணங்களாகக் கூறுகின்றார் பாம்பாட்டி. “தாமரையிலை யினிலே தண்ணீர்தங்காத் தன்மை போல” தண்ணீரிலே இருந்தாலும் தாமரை இலையிலே தண்ணீர் தங்காத் தன்மை போல ஆசாபாசங்கள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையிலே வாழ்ந்துங்கூட ஆசாபாசங்கள் பாதிக்கப்படாதவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இறைவன் ஒருவனே நித்தியமானவன் என்பதை உணர வேண்டும் என்கிறார். சேற்றிற் றிரிபிள்ளைபூச்சி சேற்றை நீக்கல்போல் பிள்ளைப் பூச்சியானது சேற்றினில் இருந்தாலும் அதன்மேல் ஏதும் சேறு ஒட்டிக்கொள்ளாமல் வாழ்வது போல நாமும் உலக இச்சைகளின் மேல் பற்று வைக்காமல் தேசத்தாரோடு ஒத்து வாழ்தல் வேண்டும் என்றும், எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லாவாறு போல் தண்ணீருக்குள் என்னதான் எண்ணெயை இரண்டறக் கலந்து விட்டாலும் அது அதனுள் ஐக்கியமாகாது. அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாது தனியே மிதப்பது போல உலக ஆசாபாசங்களில் மூழ்காது தனித்திருத்தல் வேண்டும் என்கிறார். |