பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்325


போகங்களை  யெல்லாம்  உதறி விட்டு, துறவு பூண்டு பட்டினத்தடிகளையே
தம்   ஞான   குருவாகக்   கொண்டு   அவருடைய    கட்டளைப்படியே
திருவிடைமருதூருக்குச் சென்று சட்டியில் பிச்சை எடுத்துத் தம் குருவிற்கும்
உண்பித்து சிவயோகத்தில் இருந்து வரலானார்.

     ஒருநாள்  பத்திரகிரியார்  வழக்கம்போல  திருவிடைமருதூர்  ஆலய
வாயிலில்  பிச்சைச் சட்டியில் தம் குரு சாப்பிட்ட மிச்ச உணவைச் சாப்பிடும்
போது  ஒரு நாய்க்குட்டி  அவரைப்  பரிதாபமாக  நோக்க அதற்கும் சிறிது
சாதமிட்டார். அந்த நன்றிக்கு  அந்நாய்க் குட்டியும் அவரையே சுற்றிச் சுற்றி
வந்தது.

     ஒருநாள் சித்தர் ஒருவர் பட்டினத்தடிகளிடம் போய்ப் பிச்சைக் கேட்டு
நிற்க அவரோ, தம் சீடரான பத்திரகிரியார்  ஒரு சட்டியும் நாய்க்குட்டியுமாக
இருப்பதை எண்ணி, ‘நானோ கோவணம்  தாங்குவதையே பாரமாகக் கருதும்
சந்நியாசி,  அதனால்  என்னிடமொன்றுமில்லை.  நீர்  இப்படியே  மேற்குக்
கோபுர  வாயில்  செல்வீரானால்  அங்கு  சோற்றுச்  சட்டியும் ஒரு  நாயும்
வைத்துக்கொண்டு  ஒரு சம்சாரி ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அவனிடம்
போய் பிச்சை கேளுங்கள், ஏதாவது கிடைக்கும் என்றார்.

     பட்டினத்தாரின்  வார்த்தையைச் சித்தர்  மூலம் கேட்ட பத்திரகிரியார்,
ஐயோ,  சந்நியாசியான  என்னை இந்தச்  சோற்றுச் சட்டியும் நாய்க்குட்டியும்
சம்சாரியாகிவிட்டனவே  என்று வருந்திச்  சோற்றுச் சட்டியை வீசியெறிந்தார்.
அந்தச் சட்டி நாயின் தலைமீது பட்டதால் நாய் செத்து விழுந்தது. ஞானியின்
எச்சில் சாதத்தை உண்டதால் அது காசிரானுஜக்கு மகளாய்ப் பிறந்தது.