பத்திரகிரியார் சிவயோகத்தில் பூரணமாய் ஐக்கியமாயினர். காசிராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்த நாய் வளர்ந்து அழகான மங்கையாகக் காட்சியளித்தாள். அவளது பேரழகைக் கேள்விப்பட்ட அரசர்களெல்லாம் அவளை மணந்து கொள்ள நான், நீ என்று போட்டியிட ஆரம்பித்தனர். அதனால் தகுந்த வரன் தேடச் சுயம்வரத்தை ஏற்பாடு செய்தான் காசிராஜன். ஆனால், காசிராஜன் மகளோ, தான் யாருக்கும் உரியவள் இல்லை என்று கூறித் திருவிடைமருதூரில் மேற்குக் கோபுர வாசலில் தம் குரு தனக்காகக் காத்திருப்பதாகக் கூறித் தன்னை அவரிடம் சேர்ப்பித்துவிடும்படி விண்ணப்பித்தார். காசி அரசனும் திருவிடைமருதூருக்கு வந்து பத்திரகிரியாரை மகளுடன் சந்தித்தான். காசிராஜன் மகளும் பத்திரகிரியாரைக் கண்டு, என் குருவே, அடி நாய் மீண்டும் தங்கள் திருவடியை நாடி வந்திருக்கிறது என்றாள். தம் எதிரே வந்த காசிராஜன் மகளைப் பத்திரகிரியார் பட்டினத்தாரிடம் அழைத்துச் சென்று, என் குருவே, உங்களுடைய எச்சிலை உண்ட நாய்க்கு இப்படிப் பிறவி நோய் வரலாமா? நாயானது மறுபடியும் மங்கையாகப் பிறவி எடுத்து வந்திருக்கிறதே என்று விண்ணப்பித்தார். பட்டினத்தாரும், “அவன் செயலன்றி யாவதொன்றில்லை” என்று அருள்கூர்ந்து திருவருளை நினைத்தார். உடனே ஒரு பெருஞ்சோதி தோன்றி, அதில் அப்பெண்ணுடன் பத்திரகிரியார் கலந்து மறைந்து இருவரும் முக்தியடைந்தனர். இவரது பாடல்கள் சித்தர் பாடல் தொகுப்பில் மெய்ஞ்ஞானப் புலம்பல்களாகக் காணப்படுகின்றன. |