பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்327


    இவரது மெய்ஞ்ஞானப் புலம்பல் முழுவதும் முக்தியை வேண்டி இன்னும்
எத்தனை  காலம்தான்  காத்துக்  கொண்டிருப்பது? இறைவா,  இப்பொழுதே
என்னை  அழைத்து  உன் திருவடியில் சேர்த்துக்கொள்ள மாட்டாயா? என்ற
பாணியில் அமைந்துள்ளது.

     தொடரும்  பிறவிதனை  ஒழித்துத்  தம்மை  ஆட்கொள்ளுமாறு இவர்
வேண்டும் வேண்டுதலில் திருவாசகத்தினை மனதில் பதிய வைக்கிறார்.

“புல்லாய்; விலங்காய்ப் புழுவாய், நரவடி வாய்
 எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்” (49)

     இது திருவாசக சிவபுராணத்தில்

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”

என்பதனை நினைவூட்டுகின்றது.

     இவரது காலத்தில் போதைப் பொருட்களாக கஞ்சா, அபினி ஆகியவை
இருந்தன என்பதை இவர் தம் பாட்டால் புலப்படுத்துகின்றார்.

“கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
 பஞ்சா மிர்தம் பருகுவது எக்காலம்? (35)

     நிலையாமை  குறித்துப்  பாடி உலக மக்கள் இதில் அழுந்திக் கரையும்
நிலைக்கு  வருந்தும்  நிலையைத்  தமது  பாடல்  அடிகளுள்  பின்வருமாறு
குறிப்பிடுகின்றார்.

“இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
 மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்?” (34)