ஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம். | 86 |
| | |
இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம். | 87 |
| | |
அமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங் கிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம். | 88 |
| | |
கூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல் மாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம். | 89 |
| | |
ஊனிறைந்த காயமுயிரிழந்து போகுமுன்னம் நானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம். | 90 |
| | |
கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம். | 91 |
| | |
தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம். | 92 |
| | |
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம். | 93 |
| | |
காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல் வாசி தனிலேறி வருவதினி யெக்காலம். | 94 |
| | |
ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச் சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம். | 95 |
| | |
இடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில் தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம். | 96 |
| | |
மூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில் பாலைஇறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம். | 97 |
| | |
ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம். | 98 |
| | |
பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில் சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம். | 99 |