வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத் தோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம். | 72 |
| | |
வட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக் கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம். | 73 |
| | |
உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம். | 74 |
| | |
பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந்தானாகி வேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம். | 75 |
| | |
கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ் சுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம். | 76 |
| | |
கள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங் குள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம். | 77 |
| | |
அட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம். | 78 |
| | |
அறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம் பிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம். | 79 |
| | |
பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப் பேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம். | 80 |
| | |
தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல் ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம். | 81 |
| | |
புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி யென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம். | 82 |
| | |
நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள் கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம். | 83 |
| | |
நானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம். | 84 |
| | |
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம். | 85 |