பக்கம் எண் :

298சித்தர் பாடல்கள்

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
     குத்து விளக்கேற்றி                  என் கண்ணம்மா
     கோலமிட்டுப் பாரேனோ.
3
  
சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
     தித்திக்குந் தேனமிர்தம்              என் கண்ணம்மா
     தின்றுகளைப் பாறேனோ.
4
  
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
     கம்பத்தின் மேலிருந்தே              என் கண்ணம்மா
     கண்குளிரப் பாரேனோ.
5
  
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
     அட்டாள தேசமெல்லாம்      என் கண்ணம்மா
     ஆண்டிருந்தா லாகாதோ.
6
  
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
     கொல்லென்று வந்தநமன்             என் கண்ணம்மா
     குடியோடிப் போகானோ.
7
  
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
     ஊற்றைச்சடலம்விட்டே              என் கண்ணம்மா
     உன்பாதஞ் சேரேனோ.
8