பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்299


வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
     வாழைப் பழந்தின்றால்               என் கண்ணம்மா
     வாழ்வெனக்கு வாராதோ
9
  
பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
     பையூரும் மெய்யூரும்                என் கண்ணம்மா
     பாழாய் முடியாவோ.
10
  
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
     காமன் கணைகளெல்லாம்             என் கண்ணம்மா
     கண்விழிக்க வேகாவோ.
11
  
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்சந்திரருஞ் சூரியருந் தான்போந்த காவனத்தே
     வந்துவிளை யாடியல்லோ             என் கண்ணம்மா
     மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ.
12
  
காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங்
     காட்டானை மேலேறி                என் கண்ணம்மா
     கண்குளிரக் காண்பேனோ.
13
  
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்து
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
     வச்சு மறந்தல்லோ                  என் கண்ணம்மா
     வகைமோச மானேண்டி.
14