பக்கம் எண் :

300சித்தர் பாடல்கள்

முக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
     மூக்காலைக் காணாமல்               என் கண்ணம்மா
     முழுதுந் தவிக்கிறண்டி.
15
  
காம மலர்தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாம வலிதொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாம வலிதொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
     காம மலர்மூன்றும்                  என் கண்ணம்மா
     கண்ணெதிரே நில்லாவோ.
16
  
தங்காயந் தோன்றாமல் சாணகலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றோலைத் தின்றலவோ
     தங்காயந் தோணாமல்               என் கண்ணம்மா
     சாகிறண்டி சாகாமல்.
17
  
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
     பற்றற்ற நீராகும்                   என் கண்ணம்மா
     பாசியது வேறாமோ.
18
  
கற்றாரும் மற்றோரும் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரை விட்டுப் போகையிலே
     சுற்றாரு மில்லாமல்                 என் கண்ணம்மா
     துணையிழந்து நின்றதென்ன.
19
  
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கு
     கண்ணுக்கு மூக்கடியோ              என் கண்ணம்மா
     காரணங்கள் மெத்தவுண்டே.
20