பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்301


சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கந் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத் திடைநடுவே
     இட்ட மருந்தாலே                  என் கண்ணம்மா
     இவ்வேஷ மானேண்டி.
21
  
பாதாள மூலியடி பாஷாணந் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்சாரை நெய்யூற்றி
செந்தூர மையடியோ ஜெகமெலாந் தான்மிரட்டித்
     தந்த மருந்தாலே                   என் கண்ணம்மா
     தணலாக வேகுறண்டி.
22
  
கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால் பெற்றவர்க்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
     கள்ளர் பயமெனக்கே               என் கண்ணம்மா
     கடுகளவு காணாதோ.
23
  
பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராஜாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
     பட்டணமுந் தான் பறிபோய்           என் கண்ணம்மா
     படைமன்னர் மாண்டதென்ன.
24
  
ஆகாயப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
     நோகாமல் நொந்தல்லோ             என் கண்ணம்மா
     நொடியில் மெழு கானேனடி.
25
  
தாயைச்சதமென்றே தந்தையரை யொப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கந் தீர்ந்தக்கால்
     தாயுஞ் சதமாமோ                   என் கண்ணம்மா
     தந்தையரு மொப்பாமோ.
26