அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி நெஞ்சாரப் பொய்சொல்லும் நேயமில்லா நிஷ்டூரன் கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே அஞ்சாதே யென்று சொல்லி என் கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ. | 27 |
| | |
உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன் தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி தன்னை மறக்காமல் தாயாரு முண்டானால் உன்னை மறக்காமல் என் கண்ணம்மா ஒத்திருந்து வாழேனோ. | 28 |
| | |
காயப் பதிதனிலே கந்தமூ லம்வாங்கி மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே மாயச் சுருளோலை என் கண்ணம்மா மடிமேல் விழுந்ததென்ன. | 29 |
| | |
சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்பல மானேன் உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்பல மானால் சித்திரமும் வேறாமோ என் கண்ணம்மா சிலையுங் குலையாதோ. | 30 |
| | |
புல்ல ரிடத்திற்போய் பொருள்தனக்குக் கையேந்திப் பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி பல்லைமிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா பொருளெனக்குத் தாராயோ. | 31 |
| | |
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனிமளித்துக் குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக வெட்டுண்டு பிணிநீக்கி என் கண்ணம்மா விழித்துவெளி காட்டாயோ. | 32 |