பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்315


உதையாமல் என்னைஇப்போது உதைத்தவனும்கீழிறங்கி
மதியான மூலமதில் வந்திருந்துக் கொண்டான்டி
நிதியாம் மிரண்டெலும்பு நீளெலும்பிரண்டாகி
முதியாத மாங்கிசமும் - என் ஆத்தாளே
     மூடி யதிலிருந்து.
117
  
மாதவளைக் குள்ளேயடி வந்தவது கீழ்ப்படர்ந்து
போதத்தின் முட்டியடி புகழ்நரம்பை உண்டுபண்ணி
நீதம தாகவிந்த நீள்நிலத்தி லேதிரியப்
பாதமாய் உன்னியடி - என் ஆத்தாளே
     பதியாய் வளர்ந்ததடி.
118
  
இருகண்ணின் மேலேயடி இருந்தநரம் பூடுசென்று
பெருநரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி
தரிநரம்பும் ஈரெலும்பாய்த் தான்ஒன்பது எலும்பாய்
விரிநரம்பு போலாக - என் ஆத்தாளே
     மேலாய் நுழைந்ததடி.
119
  
இட்ட எழுத்திரண்டில் ஏங்கியதில் மேற்படர்ந்து
எட்டமதி போலெலும்பு வளர்ந்து கவிந்ததடி
எட்டிரண்டும் ஒன்றாகி இருந்தவர்க்கு வீடாச்சு
வெட்டவெளி யானதடி - என் ஆத்தாளே
     மெய்யாய் இருந்துதடி.
120
  
அகார உகாரத்தில் ஆசூனி யம்பிறந்து
அகாரந் தனில்இரங்கி அரிமூலம் தன்னில்வந்து
உகாரத்துள் ஆவேறி ஓடி உலாவுவதற்கு
நிகரற்ற நாதனடி - என் ஆத்தாளே
     லிங்கமாய் வந்தான்டி.
121
  
கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ
குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
திருவாகி வந்தானோ - என் ஆத்தாளே
     சீர்திருத்த வந்தானோ.
122