பக்கம் எண் :

98
முச்சங்கங்களிருந்த காலத்தைப்பற்றி ஒருவாறு சொல்லக்கூடியவை.

27. முச்சங்கங்களிருந்த காலத்தைப்பற்றி ஒருவாறு சொல்லக்கூடியவை.

கிறிஸ்து பிறந்து இற்றைக்கு 1,914 வருஷங்களாகின்றன. கலியுகம் பிறந்து 5,014 வருஷங்களாகின்றன. கிறிஸ்து பிறந்து 100 வருஷங்கள் வரையிலும் மூன்றாவது சங்கமிருந்ததாகவும் அதன்பின் இல்லாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது சங்கமோ 1,850 வருஷங்கள் உத்தர மதுரையில் நிலைத்திருந்தது. ஆகையினால் இற்றைக்கு 3,664 வருஷங்களுக்கு முன் மூன்றாவது சங்கம் ஆரம்பமாயிற்றென்று தெளிவாய்த் தெரிகிறது. கலியுகம் துவாரகை யழிந்தபின் ஆரம்பமாயிற்றென்றும் சற்றேறக் குறைய அக்காலத்தில் இந்து சமுத்திரத்தின் ஓரமாயுள்ள பல இடங்களில் பிரளயம் உண்டாயிற்றென்றும் இதன் முன் நாம் பார்த்திருக்கிறோம். அப்பிரளயத்தில் இரண்டாம் சங்கமிருந்த கபாடபுரம் அழிபட்டதென்று தோன்றுகிறது. அப்படியானால் கலியுகத்தில் 1,350 வருஷங்களுக்குப் பிறகே மூன்றாவது சங்கம் ஆரம்பித்தாகச் சொல்ல வேண்டும். இந்த 1,350 வருஷங்களில் கொற்கையிலிருந்த பாண்டிய ராஜாக்கள் எங்கேயிருந்தார்களென்று கேட்க நேரிடும். அவர்கள் இப்போதிருக்கும் உத்தர மதுரைக்கு ஐந்து ஆறு மைலுக்கு கீழ்பாகத்திருந்த மணவூரில் வந்து தங்கி அங்கே அரண்மனை கட்டி அதிலிருந்தார்களென்று தோன்றுகிறது. அவ்விடத்திலிருந்து இப்போதிருக்கும் மதுரையில் ஒரு சிறிய ஆலயமும் பட்டணமும் கட்டி மதுரையில் அரசாட்சி செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் முன்னிருந்த இடம் பழ மதுரையென்று சொல்லப்படுகிறது. இடிந்து போன அரண்மனைகளும் மேடுகளும் இன்றும் காணப்படுகின்றன. வைகையாற்றங் கரையிலிருந்த மணவூரில் அர்ச்சுனன் வந்து தங்கியதாகவும் அப்போதிருந்த சித்தராங்கதன் என்னும் பாண்டியனுடைய மகளை அவன் கலியாணஞ் செய்ததாகவும் புராணங்களில் சொல்லப்படுகிறது. இதைக்கொண்டு ஜலப்பிரளயத்தினால் கபாடபுரம் அழிக்கப்பட்டபின் பழமதுரையில் அல்லது மணவூரில் பாண்டிய ராஜாக்கள் நெடுநாள் இருந்தார்களென்றும் மணவூரிலிருந்தே மதுரையைக் கட்டி அதன்பின் சங்கம் ஸ்தாபித்தார்களென்றும் நாம் நினைக்கலாம். கலியுக ஆரம்பத்திலுண்டான பிரளயம் போக அதன்முன் ஒரு பிரளயமும் உண்டானதாக நாம் அறிகிறோம். அது சத்தியவிரதனுடைய காலத்தில் நடந்ததாக எண்ண இடமிருக்கிறது. கலியுகம் ஆரம்பிக்கும் முன் 3,700 வருஷங்கள் கபாடபுரத்தில் பாண்டிய ராஜாங்கமிருந்ததாகவும் சங்கமிருந்ததாகவும் சொல்லப்படுவதைக் கொண்டு இற்றைக்கு 8,700 வருஷங்களுக்கு முன்னுள்ளதென்றும் அக்காலத்தில் தென் மதுரை கடலால் அழிக்கப்பட்ட தென்றும் தோன்றுகிறது. தென்மதுரையில் 4,440 வருஷங்களாக சங்கமிருந்ததாகச் சொல்லுவதை நாம் கவனிக்கையில் இற்றைக்கு சற்றேறக்குறைய 13,000 வருஷத்துக்கு முன் முதற்சங்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் தலைமுறைக் கணக்குகளைப் பார்த்தாலும் ஆதரித்த ராஜர்களில் கவியரங்கேறியவர்கள் கணக்கைப் பார்த்தாலும் அக்காலத்து தமிழ் நடையைப் பார்த்தாலும் இச்சங்ககாலம் உண்மையானதென்று தெளிவாகத் தெரியும். கற்பனைகள் பல கலந்த புராணங்களைக் கொண்டு இதின் நிச்சயம் சொல்லக் கூடாது. புராணங்கள் அநேகமாய் இற்றைக்கு சுமார் 1,000, 1,500 வருஷங்களுக்கு முன் தான் எழுதப்பட்டனவென்று அறிவாளிகள் பலர் நினைக்கிறார்கள். மதுரைத் திருவிளையாடற்புராணத்தில் 5,000, 8,000, 10,000, 15,000 வருஷங்களாக ஒவ்வொரு பாண்டியனும் ஆண்டானென்று சொல்லியிருக்கிறது. ஆனால் முச்சங்கங்களைப் பற்றிச் சொல்லுமிடத்து 50, 63, 38