வருஷங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கு வருகிறது. இதிலும் சந்ததியற்று இடையிற் கழிந்த காலமும் சேர்ந்திருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. இவைகளைக் கொண்டு தமிழ்ப் பாஷை மிகப் பூர்வமானதென்றும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் சங்கீதமும் 13,000 வருஷங்களுக்கு முன்னாலேயே யிருந்ததென்றும் சொல்வது உண்மையென்று தெளிவாகக் காண்கிறோம். இதை வாசிக்கும் கனவான்களே இற்றைக்கு 13,000 வருஷங்களுக்கு முன் ஒரு தமிழச் சங்கமிருந்ததென்பதையும் முடிமன்னர்களும் முனிவர்களும் அரிய கலைவல்லோரும் அதில் சேர்ந்து இயல் இசை நாடகமென்னும் முத்தமிழையும் விருத்தி செய்தார்கள் என்பதையும் ஒரு வேளை ஆச்சரியமாகவும் மற்றொரு வேளை சந்தேகமாகவும் எண்ணுவோம். பூர்வகாலத்திலுள்ளோர் காலங்களைத் திட்டமாய்க் குறிக்கக்கூடியதான குறிப்புகள் வைக்காததினால், நாம் இப்போது அறிந்து கொள்வது பிரயாசையாய்த் தோன்றுகிறது. காலம் திட்டமாக அறியவேண்டுமானால் புற சரித்திரங்களையும் சிற்சில ஏதுக்களையும் கொண்டுமாத்திரம் அறியக்கூடியதாயிருக்கிறது. அவ்வழக்கமே இப்போது எழுதப்படும் புஸ்தகங்களிலும் காணப்படுகிறது. இப்போது நாம் வழங்கிவரும் அநேக புத்தகங்களில் இதைக் காணலாம். இப்புத்தகங்கள் ரிஜிஸ்டர் செய்யப் படாதிருந்தால் காலவரையறை சொல்ல முடியாமல் நிற்கும். இதோடு பூர்வ நூல்களில் தாங்கள் எழுதிய வருஷத்தை மாத்திரம் வெகுதானிய, விரோதிகிருது என்று போட்டுவிடுகிறது வழக்கம். இதினால் முந்தின புஸ்தகம் பிந்தினதாகவும் பிந்தின புஸ்தகம் முந்தினதாகவும் எண்ண நேரிடுகிறது. இருந்தாலும் தற்காலத்தில் நாகரீகமற்றது என்று நாம் நினைக்கும் பூர்வ எழுத்துக்களில், திருஷ்டாந்தமாக, எ, ம என்ற எழுத்துக்கள் புள்ளிபெறம் வழக்கத்தைத் தொல்காப்பியர் சொல்வதை நாம் கவனிக்கையில் தமிழ்ப் பாஷை மிகப் பூர்வமுள்ளதென்றே தோன்றுகிறது. மேலும் பூமியின் இயற்கை வளர்ச்சியைக் குறித்துக் கூறும் எக்கேல் (Haeckel) என்னும் தத்துவ சாஸ்திரியின் அபிப்பிராயம் இன்னதென்று தெரிந்திருக்கிறோம். அவர் இப்பூமியில் ஜீவராசிகள் 5 கோடி வருஷங்களுக்கு முன்னமேயே இருந்திருக்க வேண்டுமென்று கற்களின் நடுமத்தியில் காணப்படும் இப்பி, சங்கு, நத்தை போன்ற சிறு பிராணிகளின் ஓடுகளின் வடிவத்தைக் கொண்டு தீர்மானிக்கிறார். இப்படிப்பட்ட கற்களை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இவர் ஜீவப்பிராணிகளிலிருந்து மனுஷன் எப்படி உண்டானான் என்கிற உண்மையை பிராணிகளின் எலும்புகளைக் கொண்டும் அதன்பின் கருப்பாசயத்தின் அமைப்பைக் கொண்டும் கருவின் முதல் தோற்றத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டும், தலையின் அமைப்பைக் கொண்டும் மிக விரிவாகச் சொல்லுகிறார். அவைகளில் மனுஷன் எந்தக் காலத்தில் உண்டானான் என்பதைப் பற்றியும் ஆதியில் அவன் வசித்த இடத்தைப் பற்றியும் அங்கிருந்தவர்கள் பேசிவந்த பாஷையைப் பற்றியும் அவர் சொல்லும் சில அபிப்பிராயங்களைப் பார்ப்பது பிரயோசனமாயிருக்குமென்று நம்புகிறேன். 28. குரங்கினத்திலிருந்து மனுஷன் உற்பத்தியானான் என்பது. "The Evolution of Man." By Professor Haeckel P. 352. "Hence in the genealogy of the mammals we must derive man immediately from the Catarrhive group, and locate the origing of the human race in the Old World. Only the early root form from which both descended was common to them." "மம்மேலிய வகுப்பைச் சேர்ந்த மிருகங்களின் வம்ச அட்டவணையை நாம் பார்க்கும்போது மனிதன் காற்றர்கிவ் (Catarrhive) என்னப்பட்ட குரங்குகளின் இனத்திலிருந்து உற்பத்தியானவன் என்றும், மனித ஜாதியே பழைய உலகத்திலிருந்து ஜெனித்தது என்றும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் இரு ஜாதிக்கும் பொதுவாயிருந்தது எதுவென்றால், அவை இரண்டும் ஆதியில் உற்பத்தியாவதற்குக் காரணமாயிருந்த ஆதிஜெனன ரூபமே."
|