பக்கம் எண் :

108தமிழியற் கட்டுரைகள்

துறப்பதென்றும், சூளிட்டுக்கொண்ட ஒருசார் பணியாளர் இருந்தனர். அவர் வேளைக்காரர் என்னப்பட்டனர். வேளை தவறாது பணி செய்பவர் வேளைக்காரர். அவர் தலைவன் வேளைக்கார நாயகம் என்னப்பட்டான்.

 

"ஓடாப் பூட்கை விடலை"

(புறம். 295)

 

"போரெனிற் புகலும் புனைகழன் மறவர்"

(புறம். 31)

 

"உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொள் தேர்வழி"

(புறம் 68)

என்னும் பகுதிகள், பண்டைத் தமிழ் மறவரின் மேற்கோளையும் போர் விருப்பத்தையும் தெளிவாகப் புலப்படுத்தும்.
     பூட்கை, மேற்கோள், கோள் என்பன ஒருபொருட்சொற்கள். ஒன்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதென மேற்கொள்வது மேற்கோள். அங்ஙனமே உள்ளத்தில் அல்லது செயன்முறையிற் கொள்வது கோள்,

 

"மாட்சியின் மாசற்றார் கோள்"

(குறள். 646)

என்று திருவள்ளுவரும் கூறுதல் காண்க.    
     கொள்வதும் பூணுவதும் மேற்கொள்வதும் நன்றிற்கும் தீதிற்கும் பொதுவேனும், கோள் பூட்கை மேற்கோள் என்னும் முச் சொல்லும் வழக்காற்றில் நற்கொள்கையையே குறிக்கும்.
     பூட்கை மறவரும் அவர் தலைவரும் உறுதியான கோளுடைமைப் பற்றிக் கோளர் என்னப்பட்டனர். கை என்பது படையுறுப்பாதலின், படையுறுப்பைச் சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப்பட்டனர். ஏனெனில், படையுறுப்பைச் சேராது தற்சார்பான கோளருமிருந்தனர் (free lance):

 

"ஒப்பன படையுறுப் பொழுக்கம் சிறுமை
கரமும் பின்பிறந் தாளும் கையே"

 
என்பது பிங்கலம்.
     பெரும்புலவர் ரா. இராகவையங்கார், இடங்கை வலங்கை என்பன படைவகுப்புகள் என்றும், அவற்றைச் சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப்பட்டனர் என்றும் கூறுவர். இடங்கை வலங்கை என்பன படை வகுப்புகளேயன்றி, அரசன் அமர்ந்திருக்கும்போதும் செல்லும்போதும் இடத்திலும் வலத்திலும் இருக்குமாறும் செல்லுமாறும் குறிக்கப்பட்ட குலங்களையே குறித்தலானும், இடங்கையைச் சேர்ந்தவர் வலங்கையையும், வலங்கையைச் சேர்ந்தவர் இடங்கையையும் சேராமையானும், அது பொருந்தாதென்க. கை என்பது படைவகுப்பாதலின், உறுதியான ஒழுக்கத்தைக் கைகொண்டவர் கைக்கோளர் என்பதும் பொருந்தாது.