கொண்டு உதகையைத் தாக்கிக் கைப்பற்றி கொண்டான் என்றும் ஊகிக்க வேண்டியுள்ளது. குடநாட்டுப் போர்களில் சோழரின் படைகட்குத் தலைமை பூண்டு பல போர்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடி இராசராசனுக்குப் பேரையும் புகழையும் ஈட்டிக் கொடுத்தவன் அவனுடைய மகனான இளவரசன் இராசேந்திரன். இராசராசனும் தன் மகன் கொண்ட வெற்றிகளைப் பாராட்டி வேங்கி மண்டலத்துக்கும் கங்க மண்டலத்துக்கும் அவனை ‘மகாதண்டநாயக’னாகப் பதவியில் உயர்த்தினான். ‘பஞ்சவன் மாராயன்’ என்னும் விருது ஒன்றுக்கும் இராசேந்திரன் உரியவனாக்கப் பெற்றான். மேலும் இராசேந்திரன் துளுவரையும் கொங்கணரையும் மலையாளரையும் புறமுதுகிடச் செய்தான்; தெலுங்கரையும் இரட்டிகையரையும் வென்று வாகை சூடினான். இராசராசன் கொண்ட வெற்றிகள் அனைத்தினும் சிறந்து விளங்குவது அவன் ஈழத்தைக் கைப்பற்றியதாகும். அவன் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1014-ல்) தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் சிங்களத்துச் சிற்றூர்கள் பலவற்றை நிவந்தமாக வழங்கினான். ‘இராமன் குரங்குகளின் துணைகொண்டு இலங்கைக்கு வழி அமைத்துக் கூரிய அம்புகளினால் இராவணனைக் கொன்றான். ஆனால், இராசராசன் தன் ஆற்றல் மிக்க கடற்படையைக் கொண்டு இலங்கையைக் கைப்பற்றி, அதற்கு எரியூட்டித் தன் போர்த் திறனில் தான் இராமனையும் விஞ்சியவனெனக் காட்டிக்கொண்டான்’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அவனைப் புகழ்ந்து பாராட்டுகின்றன. இராசராசன் படையெடுப்பின்போது ஐந்தாம் மகேந்திரன் என்பவன் சிங்களத்துக்கு மன்னனாக இருந்தான். இலங்கையில் கேரளரும் கருநாடரும் சேர்ந்திருந்த கூலிப் படைகள் கிளர்ச்சி ஒன்றில் ஈடுபட்டன. அக் காரணத்தினால் மகேந்திரன் இலங்கையில் காடும் மலையும் செறிந்த ரோகணம் என்ற இடத்துக்கு ஓடி ஒளிந்து வாழ்ந்து வந்தான். அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட இராசராசன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி அதற்கு மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயர் சூட்டி அதைச் சோழ நாட்டு மண்டலங்களுள் ஒன்றாக இணைத்துக் கொண்டான். ஆயிரம் ஆண்டுகட்கு மேலும் இலங்கையின் தலைநகராக விளங்கி வந்த அநுராதபுரத்தை இராசராசன் தாக்கியழித்துவிட்டான். பொலன்னருவையை ஈழத்தின் தலைநகராக்கினான். பிற்காலத்தில் முதலாம் விசயபாகு என்ற சிங்களத்து மன்னன் தன் நாட்டைச் சோழரிடமிருந்து மீட்டுக்கொண்டபோது அவனுடைய முடிசூட்டு |