பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 271

விழா அநுராதபுரத்திலேயே நடைபெற்றது. எனினும், அவன் தொடர்ந்து
பொலன்னருவையையே தன் தலைநகராகவும் கொண்டு ஆட்சிபுரியலானான்.
இராசராசன் பொலன் னருவைக்கு ஜனநாத மங்கலம் என்று புதுப் பெயர்
சூட்டி அங்குக் கருங்கல்லாலும் சலவைக் கல்லாலும் கண்கவரும்
எழிலையுடைய சிவாலயம் ஒன்றை எழுப்பினான். அவனுடைய பெயராலேயே
இராசராசேச்சுரம் அல்லது இராசராசபுரம் என்ற கோயில் ஒன்றைச் சோழரின்
பணியாளன் தாழிகுமரன் என்பான் எடுப்பித்தான். இராசராச சோழன்
தொடர்ந்து மேலைக் கங்கரின் நாட்டின்மேல் தன் போர் நோக்கத்தைச்
செலுத்தினான். அந் நாடு கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி என மூன்று
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அம் மூன்றையும் இராசராசன் வென்று
சோழப்பேரரசின் மண்டலங்களாக அவற்றை இணைத்துக்கொண்டான். அவை
கி.பி. 1117 வரையில் சோழரின் ஆட்சிக்குட்பட்டுக் கிடந்தன.

     கீழைச் சளுக்கர்களுள் உள்நாட்டுப் பூசலும் போரும் குமுறிக்
கொண்டிருந்தன. பத்தாம் நூற்றாண்டில் வேங்கி மன்னன் தன் அரசாற்றல்
அழிந்து முடங்கிக் கிடந்தான் (கி.பி. 973-999). இராசராசன் அவனுக்குப்
படைத்துணை வழங்கி மீண்டும் வேங்கியின் அரியணையின்மேல் ஏற்றி
வைத்தான். அப்போது மேலைச் சளுக்கரின் மன்னனாக இருந்தவன்
சத்தியாசிரயன் என்பவன். அவன் கீழைச் சளுக்கரையும், மேலைச்
சளுக்கரையும் ஒன்றுபடுத்தி ஒரே நாடாக அதைத் தன் குடைக் கீழ்க்
கொண்டுவரத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். இராசராசன் இத் திட்டத்தைக்
குலைக்கும் நோக்கத்தின் அடிப்படையிற்றான் சத்திவர்மனை மீண்டும்
வேங்கியின் மன்னனாக முடிசூட்டுவித்தான் (கி.பி. 999). வேங்கிச் சளுக்கரிடம்
திறை கொண்டு அவர்கள்மேல் தனக்கேற்பட்ட ஆதிக்கத்தை
வெளிப்படையாகவே காட்டிக்கொண்டான். வேங்கி நாட்டுக் கிளர்ச்சிகளையும்
உள்நாட்டுப் போரையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து சோழப் பேரரசன்
நாடு முழுவதும் அமைதியை நிலைநாட்டினான். சோழரின்
படைத்துணைகொண்டு மீண்டும் மணிமுடி தரித்துக் கொள்ளும் வாய்ப்பினைப்
பெற்ற வேங்கி மன்னன் முதலாம் சத்திவர்மனுடைய தம்பியான
விமலாதித்தனுக்கு (கி.பி. 1011-1018) இராசராசனின் மகள் குந்தவை
மணமுடிக்கப் பெற்றாள். கீழைச் சளுக்க நாடும் சோழநாடும் ஒன்றாக
இணையும் ஓரரிய வாய்ப்பை இத் திருமணம் உருவாக்கிக் கொடுத்தது.
கீழைச்சளுக்கர்கள் வேங்கியில் அமர்ந்து முந்நூறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்து
வந்தனர். இக் காலம் முழுவதும் அவர்கள் மேற்குத்