பக்கம் எண் :

272தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தக்கணத்து இராட்டிரகூடருடன் தொலையாப் பெரும்போரில்
ஈடுபட்டிருந்தனர். உள்நாட்டில் அரசுரிமைக் கிளர்ச்சிகள் வேறு அவர்களை
அலைக்கழித்தன. இத் தொல்லைகளினால் கீழைச் சளுக்கர்கள் தம்
படையாற்றலையும், ஆக்கத்தையும் இழந்து அல்லலுற்றிருந்தனர். அழிவு
காலத்தை நோக்கித் தள்ளாடிச் சென்றுகொண்டிருந்த அச் சளுக்கர்களுக்குச்
சோழர்களுடன் கொண்ட இந்தத் திருமண உறவு புத்துணர்ச்சியையும்,
மறுவாழ்வையும் அளித்து ஊக்குவித்தது என்றால் மிகையாகாது. இத்
தொடர்பினால் சளுக்கர் மட்டுமன்றிச் சோழரும் பெரும் பயன் எய்தினர்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திலும் அவனுக்குப் பின் அரசாண்ட சோழ-
சளுக்கப் பரம்பரை மன்னர் காலத்திலும் சோழப் பேரரசானது மங்காத
புகழுடன் தழைத்து நின்றதற்கும் இத்திருமண உறவு சிறப்பானதொரு
காரணமாகும்.

     மேலைச் சளுக்கர் பல நூற்றாண்டுகள் இராட்டிரகூடருக்கு அடிமைப்
பட்டிருந்தனர். இரண்டாம் தைலப்பன் மிகவும் முயன்று மேலைச் சளுக்கருக்கு
முழு அரசுரிமையையும் மீட்டுக் கொடுத்தான். அவர்களும் அவன்
தலைமையில் வீறுகொண்டெழுந்தனர். ஆனால், இரட்டபாடி ஏழரை இலக்கம்
மட்டுந்தான் அவர்களுடைய ஆணையின்கீழ் நிலைத்திருந்தது. அதனால்
அவர்கள் வடக்கில் பரமாரர்களையும், தெற்கில் சோழர்களையும் எதிர்த்துப்
போராடும் வழியின்றி இடருற்றிருந்தனர். எனவே, மேலைச் சளுக்கர் கீழைச்
சளுக்கரைத் தம்முடன் இணைத்துக்கொள்ள எடுத்துக் கொண்ட
முயற்சியனைத்தும் விழலுக்கிறைத்த நீராயிற்று. தைலப்பனையடுத்துச்
சத்தியாசிரயன் அரசுகட்டில் ஏறினான். இந்நிலையில் இராசராசனின் நாட்டம்
அவன் நாட்டின்மேல் தாவிற்று. அவன் தன் மகன் இராசேந்திரன்
தலைமையில் படையொன்றை அனுப்பினான். சத்தியாசிரயனுடன் மேற்கொண்ட
கடும்போர் ஒன்றில் இராசேந்திரன் வெற்றி கொண்டான்; இரட்டபாடி ஏழரை
இலக்கத்தைக் கைப்பற்றினான். அவன் அஃதுடன் அமையாமல் நாட்டுக்கு
எரியூட்டி அதை முழுவதும் அழித்துப் பார்ப்பனரையும் குழந்தைகளையும்
கொன்று குவித்துப் பெண்களின் கற்பைச் சூறையாடினான் என்று
சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1007) கூறுகின்றது. பகையரசன்
நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மை என்று
நம்பலாகாது. நீதியிலும் நேர்மையிலும், சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த
சோழமன்னனின் படைகள் இத்தகைய கொடுமைகளை மக்களுக்கு
இழைத்திருக்க முடியாது. எனினும், 9,00,000 போர் வீரர்களுக்குத் தலைமை
தாங்கிச் சென்ற இராசேந்திரன் ஆற்றிய போர்