மிகவும் கடுமையானதொரு கைகலப்பாக இருந்ததென்றும், அதனால் மேலைச் சளுக்கர்கட்குப் பேரிழப்பு ஏற்பட்டதென்றும் உறுதியாக நம்பலாம். இராசேந்திரனின் படைகள் சூறையாடிய செல்வங்களில் ஒரு பகுதி தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு வழங்கப்பட்டது. சத்தியாசிரயன் ஓய்ந்திருக்கவில்லை. தன் ஆற்றலையும் ஊக்கத்தையும் இழக்கவில்லை. மீண்டும் முனைப்புற்றுச் சோழருடன் போரில் இறங்கினான். போர்களில் ஓரளவு வெற்றிபெற்றுச் சோழர்களைத் துங்கபத்திரையின் தென்கரையோடு ஒடுக்கிவிட்டான். அவனுடைய நாட்டுக்கும் சோழப் பேரரசுக்கமிடையே துங்கபத்திரையாறு எல்லையாக ஓடிற்று. இராசராசன் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தின் மேற்கொண்ட வெற்றியே அவனுடைய வாணாளில் அவனுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். காந்தளூர்ச்சாலைக் கலமறுக்கவும், ஈழத்தைக் கைப்பற்றிச் சோழ மண்டலமாக்கிக் கொள்ளவும் அவனுக்குத் துணைபுரிந்த மாபெரும் கடற்படைகள், இத் தீவுகளைத் தாக்கிக் கைப்பற்றவும் உதவின. முதலாம் இராசேந்திரன் பிற்காலத்தில் இப் படைகளைக் கொண்டே கடல் கடந்து சென்று அயல்நாடுகளைக் கைப்பற்றும் வாய்ப்புடையவனானான். இராசேந்திரன் தன் இருபத்தைந்தாம் ஆண்டில் இளவரசு பட்டம் சூட்டப்பெற்றான் (கி.பி. 1012). அதனால் இராசராசனை யடுத்துச் சோழப் பேரரசின் மணிமுடிக்கு இவனே உரியவனானான். புகழ் பூத்த இராசராசனின் ஆட்சியும் கி.பி. 1014-ல் முடிவுக்கு வந்தது. சோழப் பரம்பரையிலேயே இராசராசன் மிகச் சிறந்த ஒரு வெற்றி வீரனாகத் திகழ்ந்தான் ; இணையற்ற சமயப்பற்றும் கலைத்திறனும் வாய்க்கப் பெற்றிருந்தான். அவன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலானது சோழப் பேரரசின் பெருமையையும், சீரையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் அழியாச் சின்னமாக இன்றளவும் நிமிர்ந்து நின்று வருகின்றது. இக் கோயிலின் சிற்ப எழிலை எக்கோணத்திலும் நின்று கண்டு களிக்கலாம். இதன் விமானமும், ஒற்றைக் கல்லால் சமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியும், நுண்ணிய புடைப்போவியங்களும் காண்போர் கண்களுக்கு இனிய விருந்தாகக் காட்சியளித்து வருகின்றன. தஞ்சைப் பெருவுடையார்மீது கருவூர்த்தேவர் பாடிய திருவிசைப்பா ஒன்று ஒன்பதாம் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.12 12. ஒன்பதாந் திருமுறை, கருவூர், திருவிசை, 9. 18 |