பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 287

விசயராசேந்திரன் என்ற பெயருடன் வீரராசேந்திர வர்மன், ஆகவமல்ல
குலாந்தகன், கலியாணபுரம் கொண்ட சோழன் ஆகிய விருதுகளையும் தன்
பெயருடன் இணைத்துக் கொண்டான். இராசராசனின் குருதேவர், ‘அதிகாரிகள்
பாராசரியன் வாசுதேவ நாராயணன்’ என்பவர். இவருக்கு ‘உலகளந்த சோழன்
பிரம மாராயன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு.

    இராசாதிராசனின் மகன் இளவரசன் இராசேந்திரன் கொப்பம் வெற்றிக்குப்
பெருந்துணை புரிந்தான். தன் தந்தை இறந்தவுடனே போர்க்களத்திலேயே
தான் இரண்டாம் இராசேந்திரனாக அவன் முடிசூட்டிக் கொண்டான் (கி.பி.
1052-64). அவன் கோலாப்பூரின்மேல் படையெடுத்துச் சென்று ஆங்கு
வெற்றித் தூண் ஒன்றை நாட்டினான். சோழன் தாக்குதல்களால் பலமுறை
சீர்குலைந்து போயிருந்த சளுக்க நாடு வலிகுன்றி நின்றதாயினும், தான் சோழ
மன்னருக்குத் திறை செலுத்தி வருமளவுக்குத் தன் சுதந்தரத்தை
இழக்கவில்லை. இந் நிலையைக் கண்டு பொறானாய் இரண்டாம் இராசேந்திரன்
மீண்டும் ஒருமுறை சோமேசுவரன்மேல் போர் தொடுத்தான் (கி.பி. 1062).
சோமேசுவரனின் போர்வலியும் துணைவலியும் பெருகி வந்தன. அஃதுடன்
அவன் கீழைச் சளுக்கரின் அரசியலிலும் தலையிட்டு வந்தான். அவனுடைய
துடுக்கை ஒடுக்கவே இராசேந்திரன் இப் படையெடுப்பை மேற்கொண்டான்.
இதில் அவன் மாபெரும் வெற்றியுங் கண்டான்.

    இராசேந்திரன் தன் மூத்த மகனான இராசமகேந்திரனுக்கு இளவரசு
பட்டம் சூட்டினான் (கி.பி. 1059). ஆனால், இராசமகேந்திரன் இளமையிலேயே
இவ்வுலகை நீத்தான். அவனையடுத்து முதலாம் வீரராசேந்திரன் இளவரசு
பட்டம் எய்தினான். இரண்டாம் இராசேந்திரனின் ஆட்சி கி.பி. 1063-ல்
முடிவுற்றது. அவனுக்குப்பின் அவன் இளவல் முதலாம் வீரராசேந்திரன் அரசு
கட்டில் ஏறினான் (கி.பி. 1063-70).14 சளுக்கமன்னன் சோமேசுவரன் தன்
போர் முயற்சிகளில் சளைத்தானல்லன். அவனுடைய கை ஓங்கிக்கொண்டே
போயிற்று. கூடல் சங்கமம் என்ற ஓரிடத்தில் தன்னைக் களத்தில் எதிர்
நிற்கும்படி அவன் வீரராசேந்திரனை அறைகூவி அழைத்தான். அவனுடைய
அழைப்பை ஏற்றுக்கொண்டவனாய் வீரராசேந்திரனும் மேலைச் சளுக்க
நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். மேலைச் சளுக்கரின்
தாக்குதலுக்காக அவன் கரந்தை

    14. S. I. I. III. P. 37.