பக்கம் எண் :

எழுத்தியல்17

 உ-ம்:
     பக்வம் - பக்குவம் பத்மம் - பதுமம் புண்யம் - புண்ணியம்
    காவ்யம் - காவியம், காப்பியம் வம்சம் - வமிசம்.


     வடசொற்களின் இறுதியில் வல்லினமெய்வரின், அதன்மேல் ஓர் உகரம் ஏற்றி யெழுதப்படும். அப்பொழுது அவ் வல்லினம் இரட்டிக்கும்.


     உ-ம்:
    விராட் - விராட்டு, சத் - சத்து


     சூடு, சீரகம் முதலிய தூய தென்சொற்களை ஜூடு, ஜீரகம் என்று சொல்வதும், காட்சி, மாட்சி முதலிய செந்தமிழ்ச் சொற்களைச் காக்ஷி, மாக்ஷி யென்றெழுதுவதும் சிலர் வழக்கமாயிருக்கின்றது. ஆசிரியர் இதைக் கண்டிக்க.


     காண் + சி = காட்சி, மாண் + சி = மாட்சி,
     ஆள் + சி = ஆட்சி


     சில மாணவர் காட்க்ஷி, சாட்க்ஷி என மிகைபடவும் எழுதுவர். இது பெருந் தவறு. தென்சொற்களாயின் க்ஷகரம் வருதலே கூடாது. வடசொற்களாயின் சாட்சி, சாக்கி, சாக்ஷி என மூவகையாயும் எழுதலாம்.


     திட்டாந்தம் (திருஷ்டாந்தம்), கிட்டிணன் (கிருஷ்ணன்) முதலிய வடசொற்றிரிபுகள் சிறந்தனவல்ல.


     தென்சொற்கள் வழக்கிலிருக்கும்போது அவற்றுக்குப் பதிலாக வடசொற்களை வேண்டாது (அனாவசியமாய்) வழங்குவது வழுவாகும்.


புணர்ச்சி -
Combination of words


     சொற்களைப் புணர்த் தெழுதாவிடின் பொருள் வேறுபடுவதுண்டு.


     உ-ம்: அவன் உடனே =
He at once
     அவனுடனே =
with him
     வந்தான். ஆனால் = He came, but
     வந்தானானால் = If he came or comes
ஆகையால் புணர்ச்சி அவசியம்.


     புணர்கின்ற இருசொற்களில் முந்தினது நிலைமொழியென்றும், பிந்தினது வருமொழியென்றுங் கூறப்படும்.


     புணர்ச்சி இயல்பாயிருப்பின் இயல்பு புணர்ச்சியென்றும், விகாரப்படின் விகாரப்புணர்ச்சி யென்றுங் கூறப்படும். விகாரம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.


     உ-ம்:
     இராமன் + வந்தான் = இராமன் வந்தான் இயல்பு புணர்ச்சி