பக்கம் எண் :

எழுத்தியல்19

     அ + காலம் = அக்காலம் வல்லினமெய்
     அ + மனிதன் = அம்மனிதன் மெல்லினமெய்
இங்ஙனமே பிறவும்.


     உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஈரெழுத்திருத்தலால், உயிர்மெய்ம் முதலெல்லாம் மெய்ம்முதலென்றும் உயிர்மெய் யீறெல்லாம் உயிரீறென்றும் தெரிந்துகொள்க.


     அது என்னுஞ் சொல் தனித்துவரினும் சொல்லீறாய் வரினும் ஏகாரத்தொடு புணரும்போது உகரங்கெட்டும் கெடாதும் இருவகையாய்ப் புணரும்.


     உ-ம்: அதே, அதுவே; அழைப்பதே, அழைப்பதுவே.


எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணர்தல்
 

     எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணரும்போது, ஒன்று என்பது உயிர்க்குமுன் ஓர் என்றும், மெய்க்கு முன் ஒரு என்றும் திரியும்.


     உ-ம்: ஓர் ஊர், ஒரு மனிதன்.


     இக்காலை ஓர் என்பது மெய்ம்முன்னும் வைத்தெழுதப்படுகின்றது.
     உ-ம்: ஓர் மரம்.


     இரண்டு என்பது உயிர்க்கு முன் ஈர் என்றும், மெய்க்கு முன் இரு என்றும் திரியும்.
     உ-ம்: ஈர் ஆயிரம், இரு திணை


     மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையினமெய்க்கு முன்னும் மூ என்றும், பிறமெய்கட்கு முன் மு என்றும் திரியும்.
     உ-ம்: மூவுலகு, மூவேந்தர் முக்காலம், மும்மழை
   

    நான்கு என்பது நால் என்று திரியும்.
    உ-ம்: நாலாள், நாற்பொருள்
   

    ஐந்து என்பது ஐ என்று திரியும்.
    உ-ம். ஐயாயிரம், ஐம்பூதம், ஐந்நூறு
   

    ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும்; மெய்க்கு முன் குறுகும்.
    உ-ம்: ஆறாயிரம், அறுகால்
   

    ஏழு என்பது உயிர்க்குமுன் ஏழ் என்றும், மெய்க்கு முன் எழு என்றும் திரியும்.
    உ-ம்: ஏழுலகு, எழுபிறவி
   

    எட்டு என்பது எண் என்று திரியும்.
    உ-ம்: எண்ணாயிரம், எண்குணம்.
  

இரண்டுமுதல் எட்டுவரையுள்ள எண்ணுப்பெயர்கள் இரண்டுபேர், மூன்றுநாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும். ஆயினும், அது அத்துணைச் சிறப்பின்று.