|
விடை
என்னும் சொல்லின் திரிபாதலாலேயே, வ்ருஷ என்பதில்
வகரமுள்ளது. ஆயின், வ்ருஷ் (மழைபெய்) என்னுஞ் சொல்லொடு அதைத்
தொடர்புபடுத்தி உத்திக்கொவ்வா முறையில் பொருள் தொடர்பு காட்டினர்.
அதனோடமையாது, ருஷப என்னும் முதற்குறைத் திரிபையும் வேறு
சொல்லாகக் கொண்டு, அதற்கும் பொருந்தா முறையிற் பொருள்
பொருத்தினர்.
விடை
என்பது கொச்சை வடிவில் விட என்று நிற்கும். இடையின
விடைச்செருகல் வழக்கப்படி வி-வ்ரு என்றும், மெய்த்திரிபு மரபுப்படி ட-ஷ
என்றும், திரிந்தனவென உண்மை அறிக.
விண்டு-விஷ்ணு
விள்ளுதல்
= விரிதல், வெளியாதல். விள்-வெள்-வெளி.
விள்-விண் = 1. விரிந்த அல்லது வெளியாகிய வானம்.
"விண்பொருபுகழ்
விறல்வஞ்சி" (புறம். 11).
2.
வானத்திலுள்ள முகில் (திவா.).
3.
மேலுலகம். "விண்மீ திருப்பாய்" (திவ். திருவாய்.6:9:5).
விண்-விண்டு
= 1. வானம்.
"விண்டுலாய்
நிமிர் கிரவுஞ்சகிரி" (கந்தபு. தாரக. 2).
2.
முகில் (பிங்.). 3. வானளாவு மலை.
"விண்டு
நிறைய வாணன் வைத்த விழுநிதி" (மதுரைக்.202).
4.
வானவெளியில் இயங்கும் காற்று (பிங்.).
5.
திருமால் (பிங்.).
குமரிக்கண்ட
முல்லைநிலத்து மக்கள், தங்கட்கும் தங்கள்
ஆடுமாடுகட்கும்
இன்றியமையாத மழையைத் தரும் தெய்வமென்று
கருதியே, கரிய வானத்தை அல்லது முகிலை மாயோன் (கரியோன்)
என்னும் பெயரால் வணங்கிவந்தனர்.
ஒ.நோ:
மால் = முகில், மாயோன்:
இச் சொல்லே திரு என்னும் அடைபெற்றுத் திருமால்
எனத்
தெய்வப்பெயராய் வழங்கி வருகின்றது.
ஆரியர்
வேதக்காலத்தில் கதிரவனையே விஷ்ணு என்றழைத்தனர்.
பின்னர், தமிழரொடு தொடர்புகொண்டு தமிழ்மதத்தை மேற்கொண்ட
பின்பே, விஷ்ணு என்னும் சொல் திருமாலைக் குறிக்கலாயிற்று.
வடவர்
காட்டும் மூலம் விஷ்1 = வேலைசெய், ஓடு, மேம்படு, மூடு,
உண். மா. வி. அ. "prob. for vish, 'All-pervader' or worker' என்று
கருதும்.
|