வரையும் தென் தமிழ்நாட்டில் அனுபோகத்தில் நிலைத்திருக்கிறவை யென்றும் திட்டமாய் அறிந்து கொள்வோம். உலகத்தவர் எவராலும் இதன்மேல் நுட்பமாய்ச் சொல்ல முடியாதென்று கருதும்படி மிகுந்த தேர்ச்சிபெற்ற சங்கீத நூலைப்போலவே சிற்பம், சோதிடம், கணிதம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் முதலிய அருங்கலைகளும் மற்றும் பாஷைகளில் திருப்பப்பட்டு வந்திருக்கின்றனவென்றும் வருகின்றனவென்றும் நூல் ஆராய்ச்சி செய்யும் அறிவாளிகள் காண்பார்கள். தமிழ் மக்களின் கானமே மிகப் பூர்வமானது. தமிழ் மக்களின் கானமே உலகத்தவர் கானங்கள் யாவற்றிலும் மிகுந்த தேர்ச்சியுள்ளது. உலகத்தவர் யாவரும் அனுபோகத்தில் காணக்கூடியது. அவர்கள் சொல்லும் ஏழு சுரங்களும் பன்னிரண்டான அரைச்சுரங்களும் இருபத்து நான்கான கால் சுருதிகளும், 48, 96 ஆன நுட்ப சுருதிகளும் நிச்சயமானவை. நாம் வாயினால் சொல்லவும் காதினால் கேட்கவும் கூடிய நுண்மையான ஓசை இன்னதென்று திட்டமாய் மற்றவர் அறிந்து கொள்ளாததினால் சுருதிகள் ஒன்றுதான், சுருதிகள் இரண்டு விதம், சுருதிகள் மூன்றுவிதம், சுருதிகள் நான்கு விதம், சுருதிகள் ஒன்பது விதம், சுருதிகள் பத்தொன்பது விதம், சுருதிகள் இருபத்திரண்டு விதம், சுருதிகள் இருபத்தைந்துவிதம் சுருதிகள் நாற்பத்துஇரண்டு விதம், சுருதிகள் ஐம்பத்து மூன்று விதம், சுருதிகள் அறுபத்து ஆறு விதம், அனந்தங்கள் என்று பலர் பலவிதமாகச் சொல்லுகிறதாக நாம் அறிவோம். பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த இசைத் தமிழின் வார்த்தைகளும் பல அரிய முறைகளும் தற்காலத்தில் முற்றும் வழக்கத்திலில்லாமல் அந்நிய பாஷைச்சொற்களால் வழங்கிவருவதால் அவற்றிற்குரிய பல குறிப்புகளையும் அங்கங்கே அடிக்கடி எடுத்துச் சொல்லவேண்டியதாயிற்று. இப்புத்தகத்தின் நாலு பாகங்களில், ஒவ்வொன்றிலும் அடங்கியிருக்கும் விஷயங்கள் இன்னவையென்று, அதனதன் முகவுரையிலும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அவைகளைக்கொண்டு நாலு பாகங்களின் கருத்து ஒருவாறு அறிந்துகொள்வது சுலபமாகும். ஆகையினால் இம்முகவுரை சுருக்கமாக எழுதப்பட்டது. புலியும் பசுவும் ஒரு துறையில் நீரருந்த, சகல கலைகளும் தொழில்களும் செழித்தோங்க, சகல வளங்களாலும் சிறந்த விளங்கிய இந்தியாவிற்கு ஏகசக்ராதிபதியாகவம் இங்கிலாந்திற்கு அரசராகவும் கருணையுடன் மணிமுடி சூடி செங்கோல் கைக்கொண்ட His Most Gracious and Imperial Majesty King George V and Her Majesty Queen Mary அவர்களின் நல் அரசாட்சியின் ஏழாவது வருடத்தில், H. E. The Right Hon’ble, Lord Chelmsford, P.C., G. C. M. G., அவர்கள் இந்தியாவிற்கு Viceroy ஆகவும், H. E. The Right Hon’ble, Baron Willingdon, G. C. .I .E., அவர்கள் பம்பாய்க்கு Governor ஆகவும், H. E. The Right Hon’ble, Baron Pentland of Lyth, P.C. G. C. I. E., அவர்கள் மதிராஸுக்கு Governor ஆகவும் இருந்த 1917-ஆம் வருடத்தில் இந்நூல் எழுதப்பெற்றது. நான் அறியவேண்டிய விஷயங்களைப் படிப்படியாய் உணர்த்தி, அனுக்கிரகம் செய்த பெரியோர்களை மனப்பூர்வமாய் வணங்குகிறேன். இவை யாவற்றிற்கும் ஆதிகாரணனாக விளங்கும் கர்த்தர் திருப்பாதங்களை நமஸ்கரிக்கிறேன்.
|