பக்கம் எண் :

201
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சீனிவாச ஐயங்கார். இவர் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் மாணாக்கர். ராகம், பல்லவிகள் நன்றாய்ப் பாடுவார். சங்கீத லட்சிய லட்சணங்களை அறிந்த சிறந்த வித்வான். பல இடங்களுக்கும் போய் விசேஷ சன்மானம் பெற்றிருக்கிறார். இராமனாதபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாய் அநேக மாணாக்கர்களுக்கு சொல்லி வைத்துக் கொண்டுமிருக்கிறார்.

சீனிவாச ராவ். ஸ்ரீரங்கம். பீமாச்சாரியார் குமாரர். தகப்பனும் மகனும் நன்றாய்ப் பாடுவார்கள். பீமாச்சாரியார் வீணை வாசிப்பார்.

சீனிவாச ராவ். கும்பகோணம். மகா வைத்தியநாதையரின் மாணாக்கரான உமையாள்புரம் சாமிநாத ஐயரின் மாணாக்கர். புல்லாங்குழல் சுகமாய் வாசிப்பார்.

சீனிவாச ராவ். இவருக்கு கோட்டு வாத்தியம் சீனிவாசராவ் என்று பெயர். கோட்டு வாத்தியத்திலும் பிடிலிலும் கமகங்களுடன் வெகு இனிமையாய் வாசிப்பார். காம்பீரமாய் பாட்டும் பாடுவார்.

சீனிவாசையர். அர்த்தபுஷ்டியுள்ள அநேகபதங்களையும் கீர்த்தனைகளையும் தமிழ்ப்பாஷையில் விஜயகோபால முத்திரையுடன் செய்திருக்கிறார். இவர் மதுரையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் மந்திரியாயிருந்தவர்.

சீனுவையர் சௌக்கம். இவர் சரபோஜி, சிவாஜி மகாராஜாக்கள் காலத்தில் தஞ்சாவூரில் சமஸ்தான வித்வானாயிருந்தவர். சௌக்கமாயும் விளம்பமாயும் ராக ஆலாபனைகள் பாடும் சாமர்த்தியத்தால் இவருக்கு ‘சௌக்கம் சீனுவையர்’ என்று பெயர் உண்டாயிற்று.

சீனையங்கார். செட்டிபட்டணம். இவர் சங்கீதத்தில் பெரிய வித்வான். அநேக பதங்கள் எழுதியிருக்கிறார்.

சீனையா. இவரை கனம் சீனையா என்று அழைப்பார்கள். இவர் சேஷையரின் குமாரர். வாதுல தேசிகருடைய மாணாக்கர். சமஸ்கிருதம், தெலுங்கு, சங்கீதம் இவைகளில் மிகுந்த பாண்டித்தியமுடையவர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாளில் மந்திரியாயிருந்தவர். மன்னார் ரங்கமுத்திரையுடன் அநேக கீர்த்தனைகளும், பதங்களும் செய்திருக்கிறார். இவர் க்ஷேத்திரிக்ஞர் காலத்தில் இருந்ததாகச் சொல்லுகிறார்கள்.

சு

சுதாகளச. 1324. இவர் "சங்கீதோபநிஷத்" "சங்கீதோபதிஷத்சாரம்" என்னும் புஸ்தகங்களை எழுதியிருக்கிறார்.

சுந்தரஐயர். இவர் பிடில் வாசித்துக் கொண்டே பாடுவார். குரலும் பிடிலும் சேர்ந்து அதி இனிமையாயிருக்கும்.

சுந்தரஐயர். இவர் பைடால சுப்பராயசாஸ்திரியாரின் குமாரர். மிக இனிமையாய்ப் பாடுவார்.

சுந்தர சிங். இவரும் இவர் தமயன் சதுர்சிங்கும் இந்துஸ்தானி நன்றாய்ப் பாடுவார்கள். இவர் பிடில் சுகமாய் வாசிப்பார்.

சுந்தரநாயக்கர். சப்ஜட்ஜ் நாகப்பட்டணம். வீணை பிடில் நன்றாய் வாசிப்பார். பாடுவார்.

சுந்தரப்பையர், சுப்பராமையர், சேஷையர். இந்த மூன்று சகோதரர்களும் சங்கீத வித்வான்கள். இவர்கள் தமிழில் பதங்களும் கீர்த்தனைகளும் செய்திருக்கிறார்கள்.