பக்கம் எண் :

200
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

சின்னையா. கி. பி. 1,500. இவருக்கு தாளப்பாக்கம் சின்னையா என்று பேர். இவர் வேங்கடா சலபதியை பக்தி பண்ணிக்கொண்டு திருப்பதியில் இருந்தவர். சுவாமிக்கு தோடையம், மங்களம், சரணம், எச்சரிக்கை கீர்த்தனங்கள், தூப தீப அலங்கார நைவேத்யாதி உபசாரங்களுக்குத் தகுந்த கீர்த்தனங்கள், வசந்தோற்சவக் கீர்த்தனைகள், திருப்பள்ளி எழுச்சிக் கீர்த்தனைகள், திவ்யநாம சங்கீர்த்தனங்கள், பஜனைபத்ததி முதலியவைகளை இவரே முதல் முதல் செய்தவர். இராமாமாத்தியருக்கு முன்னிருந்தவராகத் தெரிகிறது.

சின்னையா நட்டுவனார். தஞ்சாவூர், வடிவேல்நட்டுவனாரின் சகோதரர். பரத நாட்டியம் சொல்லிவைப்பதில் இவருக்கு இணையானவர் ஒருவருமில்லையென்று நாளதுவரையும் சொல்லப்படுகிறது. சிவாஜி மகாராஜா காலத்திலிருந்தவர். இவர் செய்த பரதத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் ஆடக்கற்றுக் கொண்டார்கள். தஞ்சாவூர் மகாராஜா இதன் பின் புருஷர்கள் நடனம் பண்ணுவதற்கும் தன் அரண்மனை மாடுகளுக்கு முன்னால் புருஷர்கள் ஆடுவதற்கும் இடஞ்செய்து பரத நாட்டியத்தை விருத்தி செய்தார். பரதசங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர்.

சின்னையா பாகவதர். இவர் திருநெல்வேலியிலிருந்தார். வீணையில் சிறந்த வித்வான். இவருக்கு அநேக மாணாக்கர் இருந்தார்கள். மற்ற தேசத்திலிருந்து வரும் வித்வான்களையும் ஆதரிக்கும்படியான தன்மையுடைய வராயிருந்தார்.

சீ

சீத்தாராம பாகவதர். இவர் திருவனந்தபுரம் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர், மிகவும் நன்றாய்ப் பாடுவார்.

சீத்தாராமையர். தாசில்தார், மதுரை. இவர் அந்தணநல்லூர் சுப்பையரிடம் சொல்லிக் கொண்டு வீணை முதலான வாத்திய வாசிப்பிலும் வாய்ப்பாட்டிலும் கெட்டிக்காரராயிருந்தார்.

சீத்தாராமையர். இவருக்கு சோல்ஜர் சீத்தாராமையர் என்று பேர். திருவையாறு தியாகராஜ ஐயர் மாணாக்கர். இராகம் பல்லவி நன்றாய்ப் பாடுவார்.

சீத்தாராமையர். விஜயநகரம் சமஸ்தான வித்வான். குருராயாச்சாரியாருடைய குமாரர். தகப்பனாருக்குப் பின் சமஸ்தான வித்வானாயிருந்தார். இவர் வீணையில் ஷட்காலங்களையும் நன்றாய் வாசிப்பார். வீணையில் அதிகமாய் அப்பியாசம் செய்து பல்லவிகளையும் இராகங்களையும் நன்றாய்ப் பிரஸ்தரித்து சுகமாய் வாசிப்பார்.

சீத்தாராமையர். இவருக்குத் தோடி சீத்தாராமையர் என்று பெயர். இவர் சரபோஜி மகாராஜா கால ஆரம்பத்தில் தஞ்சாவூரிலிருந்தவர். இவர் தோடி இராகத்தையே தமது சொத்தாகக் கொண்டு அதில் அதிகப் பிரியமும் அதிக உழைப்புமுள்ளவர். தோடி இராகத்தை அநேக வித கற்பனைகளுடன் விந்நியாசப்படுத்திப் பாடும் பழக்கத்தையுடையவர்.

சீத்தாராமையர். இவர் திருவத்தூர் வீணைகுப்பையரின் மாணாக்கர். ராகம், பல்லவி இவைகளை வெகு ஒழுங்காய்ப் பாடுவார்.

சீத்தாராமு. ஐதராபாத்து. இவர் பெரியகுப்புசாமி சின்னக் குப்புசாமியின் சகோதரர். பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார்.

சீனிவாச ஐயர். திருநெல்வேலி. சங்கீதத்தில் அநேக நுட்பங்கள் தெரிந்த சங்கீதவித்வான். பிடில் நன்றாய் வாசிப்பார்.